பழநி பைபாஸ் சாலையில் கொட்டப்படும் இறைச்சி கழிவுகளால் நோய் அபாயம்

பழநி: பழநியில் பைபாஸ் சாலையில் கொட்டப்படும் இறைச்சி கழிவுகளால் பொதுமக்களுக்கு நோய் அபாயம் ஏற்பட்டுள்ளது. பழநி நகரில் ஏராளமான இறைச்சி கடைகள் உள்ளன. தவிர பழநி நகரின் சுற்றுப்புற கிராமங்களில் ஏராளமான கோழி பண்ணைகளும் உள்ளன. இந்த இறைச்சி கடைகள், கோழி பண்ணைகளில் மீதியாகும் இறைச்சி கழிவுகள், இறகுகள் போன்றவற்றை மூட்டைகளாக கட்டி சிவகிரிப்பட்டி பைபாஸ் சாலையில் ஆங்காங்கே கொட்டி விடுகின்றனர். இதனால் அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுகிறது. ஐயப்ப பக்தர்கள் அதிகளவு நடமாடும் இடும்பன் கோயில் பகுதியில் இறைச்சி கழிவுகள் அதிகளவு கொட்டப்படுவதால் கடும் அவதிக்குள்ளாக நேரிடுகிறது.

இதுகுறித்து பழநியை சேர்ந்த விசாலாட்சி கூறியதாவது, ‘இரவு நேரங்களில் சிவகிரிப்பட்டி பைபாஸ் சாலை ஓரங்களில் இறைச்சி கழிவுகளை வாகனங்கள் ஏற்றி வந்து கொட்டிவிட்டு செல்கின்றனர். இதனால் இப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இறைச்சி கழிவுகளை உண்ண வரும் நாய் போன்ற விலங்குகள் அவ்வழியே வரும் ஐயப்ப பக்தர்களை விரட்டுகின்றன. சில சமயம் கடிக்க முற்படுகின்றன. மேலும், துர்நாற்றத்துடன் நோய் அபாயமும் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இறைச்சி கழிவுகளை கொட்டும் நபர்களைக் கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.

Related Stories: