மதுரை அருகே 3 ஆண்டுகளுக்கு முன் மூடப்பட்ட அரசுப் பள்ளி மீண்டும் திறப்பு: பொதுமக்கள், மாணவ, மாணவியர் மகிழ்ச்சி

மதுரை: மதுரை அருகே, மாணவர்கள் வருகை குறைவால் மூடப்பட்ட அரசுப் பள்ளி மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இதனால், கிராம மக்கள் மாணவ, மாணவியர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மதுரை- அழகர்கோவில் ரோட்டில் அப்பன்திருப்பதி அருகே பூண்டி கிராமம் உள்ளது. மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட இக்கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப்பள்ளி கடந்த 1957ல் துவங்கப்பட்டது. இங்கு 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை மாணவ மாணவிகள் பயின்று வந்தனர். சில ஆண்டுகளுக்கு முன் பள்ளியில் இருந்த பழைய கட்டிடம் பாதுகாப்பு கருதி இடிக்கப்பட்டது. புதிய கட்டிடம் கட்டப்படவில்லை. தற்போது ஓட்டுக் கட்டிடத்தில்தான் வகுப்பறைகள் செயல்பட்டு வருகின்றன.

பல்வேறு காரணங்களால் மாணவர்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கி, 2019ல் ஒரே ஒரு மாணவர் மட்டுமே இப்பள்ளிக்கு வந்தார். இதையடுத்து கடந்த 2019ல் பள்ளி துவங்கிய சில வாரங்களிலேயே திடீரென பள்ளி மூடப்பட்டது. இந்நிலையில், மூடப்பட்ட இப்பள்ளியில் முன்பு ஆசிரியையாக பணிபுரிந்து, தற்போது மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியம் அரும்பனூர் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றிய ஆசிரியை சகாய அமல ராணி என்பவர், பூண்டி கிராமத்து மக்களை சந்தித்து, ``உங்கள் குழந்தைகளை மீண்டும் இந்தப் பள்ளிக்கு அனுப்பி வையுங்கள்’’ என்று வேண்டுகோள் விடுத்தார். பூண்டி கிராமத் தலைவர் தமிழன் உள்ளிட்டோரும் அவருக்கு உறுதுணையாக இருந்தனர்.

வீடுவீடாக சென்று, பெற்றோரை சந்தித்து தற்போதைய திமுக அரசு கல்விக்கு தரும் முக்கியத்துவத்தை இவர்கள் எடுத்துக்கூறினர். கல்வித்துறை அதிகாரிகளும் இதற்கான முயற்சியில் இறங்கினர். இதைத்தொடர்ந்து 2001ம் ஆண்டு முதல் 2010ம் ஆண்டு வரை இந்த பள்ளியில் ஆசிரியராக பணியாற்றிய ஆசிரியை சகாய அமல ராணியை மீண்டும் இப்பள்ளிக்கு ஆசிரியையாக கொண்டுவரும்படி கிராமத்தினர் கோரிக்கை வைத்தனர். கிராம மக்களின் இந்த கோரிக்கையை கல்வித்துறை அதிகாரிகளும் ஏற்றனர். இந்நிலையில், நடப்பு கல்வி ஆண்டு அரும்பனூர் பள்ளி ஆசிரியை சகாய அமல ராணி, பூண்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆசிரியையாக மாற்றுப்பணியில் நியமிக்கப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து, பூண்டி கிராம மக்கள் தங்கள் குழந்தைகளை, பூட்டிக்கிடக்கும் பள்ளிக்கு அனுப்ப முன்வந்தனர். இப்பள்ளி கடந்த ஜூன் மாதம் திறக்கப்பட்டு, மாணவர் சேர்க்கை நடந்தது. தற்போது 22 மாணவர்கள் இப்பள்ளியில் பயின்று வருகின்றனர். மூடிய பள்ளி திறக்கப்பட்டு, 22 மாணவர்கள் பயின்றுவருவது அனைத்து தரப்பினருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பூண்டி கிராமத் தலைவர் தமிழன் கூறுகையில், ``பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் சரிந்து, பள்ளி மூடப்படும் நிலைக்கு சென்றுவிட்டது.

ஆசிரியையுடன் பலரது முயற்சிகளால் இன்று பள்ளி உயிர் பெற்றுள்ளது. குழந்தைகளின் கல்விதான் முக்கியம் என நினைத்து பள்ளியை திறப்பதில் கல்வி அதிகாரிகளும், அரசும் செயல்பட்டதால், இன்று இப்பள்ளி திறக்கப்பட்டு, 22 மாணவர்கள் பயின்று வருகின்றனர்’ என்றார். கல்வி அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘அரசு பள்ளிகளை மேம்படுத்த, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனிக் கவனம் காட்டி வருகிறார். எந்த பள்ளிகள் இப்படி மூடப்படும் நிலை இருந்தாலும் அதனை மேம்படுத்தி திறப்பதற்கான நடவடிக்கைகள் வேகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அடிப்படை வசதிகளை செய்து தரவும் அரசு உத்தரவிட்டுள்ளது’’ என்றார்.

Related Stories: