வெடித்து சிதறிய ஏவுகணை தென்கொரியாவில் பரபரப்பு

சியோல்: வடகொரியாவின் ஏவுகணை சோதனைக்கு எதிராக தென்கொரியா ஏவிய ஏவுகணை அந்நாட்டின் விமானப்படை தளத்தில் விழுந்து வெடித்தது. அமெரிக்கா, ஜப்பானுடன் இணைந்து தென்கொரியா கூட்டு ராணுவ போர் பயிற்சி மேற்கொள்வதால் ஆத்திரமடையும் வடகொரியா, இந்நாடுகளுக்கு எதிராக தொடர் ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. இந்நிலையில், அணு ஆயுதத்தை சுமந்து செல்லும் ஏவுகணையை வடகொரியா நேற்று முன்தினம் சோதனை செய்தது. இந்த ஏவுகணை ஜப்பானின் வான்பரப்பை கடந்து சென்று பசிபிக் கடலில் விழுந்தது. இது வடகொரியா கடந்த ஒரு வாரத்தில் 5வது முறையாக நடத்திய சோதனையாகும்.

வட கொரியா 2017ம் ஆண்டுக்குப் பிறகு ஜப்பான் வான் எல்லைக்கு மேலே செலுத்தும் முதலாவது ஏவுகணை இதுவாகும். இதன் காரணமாக, ஹொக்கைடோ தீவு, அமோரி நகர மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி ஜப்பான் அரசு எச்சரித்திருந்தது. இந்நிலையில், போர் பயிற்சியின் போது வடகொரியாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட `ஹியூமோ-2’ என்ற 2 கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை தென்கொரியா ஏவியது. இதில், ஒரு ஏவுகணை நடுவானில் வெடித்து கேங்னுங் விமானப்படை தளத்தில் விழுந்து வெடித்தது. இதில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. இதனால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: