உக்ரைனில் சிக்கியுள்ள சிறுத்தைகளை மீட்டு தாருங்கள்: ஒன்றிய அரசுக்கு ஆந்திர டாக்டர் கோரிக்கை

லண்டன்: உக்ரைனில் சிக்கி உள்ள சிறுத்தைகளை மீட்க இந்திய அரசு உதவ வேண்டுமென போலந்தில் தஞ்சமடைந்துள்ள ஆந்திர டாக்டர் கிடிகுமார் பாட்டீல் வலியுறுத்தி உள்ளார். ஆந்திரா மாநிலம், மேற்கு கோதாவரி மாவட்டம், தனுகு பகுதியை சேர்ந்தவர் கிடிகுமார் பாட்டீல் (42). இவர் உக்ரைனில் டாக்டராக பணிபுரிந்தவர். 2 ஆண்டுகளுக்கு முன்பு உக்ரைன் தலைநகர் கீவ்வில் உள்ள மிருகக்காட்சி சாலையில் இருந்து கறுஞ்சிறுத்தை, சிறுத்தை புலியை வாங்கி செல்லப்பிராணிகளாக வளர்த்து வந்தார். அவைகளுடன் தனது தினசரி நிகழ்வுகளை வீடியோவாக பதிவிட்டு அவற்றை யூடியூப்பில் வெளியிட்டு வந்தார். 62 ஆயிரம் பேர் இவரின் சேனல் விரும்பிகளாக உள்ளனர்.

இ்ந்நிலையில், ரஷ்யா, உக்ரைன் இடையே போர் மூண்டதைத் தொடர்ந்து, பாட்டீல் தங்கியிருந்த லுஹான்ஸ்க் நகரில் இருந்து வெளியேறினார். சிறுத்தைகளுடன்தான் வருவேன் என பிடிவாதமாக இருந்த அவர், ஒரு கட்டத்தில் அவைகளை அழைத்து வர முடியாததால் உள்ளூர் விவசாயிடம் கொடுத்துள்ளார். அவர் மட்டும் அண்டை நாடான போலந்தின் வார்சாவில் தஞ்சமடைந்துள்ளார். அவர் தனது சிறுத்தைகளை மீட்க கீவ்வில் உள்ள இந்திய தூதரகம் மூலமாக முயன்று வருகிறார். ஆனால், அது முடியவில்லை. இந்நிலையில், தனது சிறுத்தைகளின் பாதுகாப்பு கருதி அவற்றை உடனடியாக மீட்க உதவுமாறு அவர் இந்திய அரசிடம் மன்றாடி உள்ளார். சிறுத்தைகளின் நிலை தெரியாமல் உணர்வுப் போராட்டத்திலும், மன நெருக்கடியிலும் சிக்கித் தவிப்பதாகவும் பாட்டீல் கூறி உள்ளார்.

Related Stories: