பண்டிகை விடுமுறை முடித்து ஊர் திரும்புவோருக்காக தமிழகம் முழுவதும் 3,210 அரசு பஸ்கள் இயக்கம்: போக்குவரத்துத்துறை உயர் அதிகாரி தகவல்

சென்னை: ஆயுத பூஜை, விஜயதசமி மற்றும் தொடர் விடுமுறை முடித்து சென்னை மற்றும் சொந்த ஊர் திரும்புவோரின் வசதிக்காக தமிழகம் முழுவதும் 3,210 அரசு பஸ்கள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஆயுதபூஜை, விஜயதசமியை ஒட்டிய தொடர் விடுமுறை காரணமாக கடந்த 30ம் தேதி இரவு முதலே சொந்த ஊர்களுக்கு மக்கள் சென்றனர். அவர்களின் வசதிக்காக செப்.30, அக்.1ம் தேதிகளில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டது. மொத்தமாக 5,679 பேருந்துகள் இயக்கப்பட்டன. இதன் மூலமாக 3,12,345 பயணிகள் சொந்த ஊர்களுக்கு சென்று இருந்தனர்.

இதேபோல் சென்னையில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு 2,950 ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டன. இதன் மூலம் 1,06,200 பயணிகள் பயணித்தனர். இதுதவிர தெற்கு ரயில்வே சார்பில் வழக்கமாக இயக்கப்படும் ரயில்களுடன் சேர்த்து சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. இதனை பயன்படுத்தியும், சொந்த வாகனங்களான கார், இருசக்கர வாகனம் போன்றவற்றை பயன்படுத்தியும் பலர் சொந்த ஊர்களுக்கு சென்றிருந்தனர். மொத்தமாக அரசு பஸ், ஆம்னி பஸ், ரயில், கார் போன்றவற்றின் மூலமாக 8 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பல்வேறு இடங்களுக்கு சென்றதாக கூறப்படுகிறது. இவ்வாறு சென்றவர்களுக்கான விடுமுறை நேற்றுடன் முடிவடைந்தது.

இதனால் அவர்கள் நேற்று காலை 11 மணி முதல் மீண்டும் சென்னைக்கு திரும்பினர். மாலை 6 மணிக்கு பிறகு கூட்டம் மேலும் அதிகரித்தது. இதையடுத்து தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இருந்து தேவைக்கு ஏற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டன. தொடர்ந்தும் இன்றும் பெரும்பாலோனர் சென்னைக்கு திரும்புவார்கள் என்பதால் கூடுதல் பேருந்துகள் இயக்க போக்குவரத்துத்துறை திட்டமிட்டுள்ளது. இதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதுகுறித்து அரசு விரைவு போக்குவரத்துத்துறை உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ‘ஆயுத பூஜை விடுமுறைக்கு சொந்த ஊர்களுக்கு செல்வோரின் வசதிக்காக வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் சேர்த்து கூடுதல் பேருந்துகள் இயக்கினோம். இதனால் பொதுமக்கள் எவ்விதமான சிரமும் இல்லாமல் கூடுதல் சொந்த ஊர்களுக்கு சென்றனர். இந்நிலையில் இவ்வாறு சென்றவர்கள் மீண்டும் சென்னை திரும்பி வருகின்றனர். இதேபோல் கோவை, ஈரோடு, பெங்களூரு போன்ற இடங்களுக்கும் பயணிக்கிறார்கள். எனவே இவர்களின் வசதிக்காக போதுமான பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது. பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என அந்தந்த மண்டல மேலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதன்படி அவர்கள் முன்பதிவு மற்றும் நேரடியாக பயணிக்க வருவோரின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு அதற்கு ஏற்ப பேருந்துகளை தயார் செய்து வைத்துள்ளனர். அவை குறிப்பிட்ட இடைவெளியில் சென்னைக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு வரும். அதாவது நேற்றும் (5ம் தேதி), இன்றும் (6ம் தேதி) தினசரி இயக்கக்கூடிய 2,100 பேருந்துகள் உடன் கூடுதலாக 1,150 பேருந்துகள் ஆக மொத்தம் 3,250 பேருந்துகள் இயக்கப்படுகிறது. குறிப்பாக நெல்லை, மதுரை, கோவை, திருச்சி போன்ற இடங்களில் இருந்து சென்னைக்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். எனவே இவ்விடங்களில் எவ்விதமான சிரமும் இல்லாமல் தேவையான பேருந்துகளை இயக்க வேண்டும் என கூடுதல் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் நேரடியாக வந்து பயணிக்கும் வகையிலும் www.tnstc.in மற்றும் tnstc official app மூலமாக முன்பதிவு செய்யும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது’ என்றார்.

Related Stories: