கடைகளுக்கு குட்கா விற்ற இந்து முன்னணி தலைவர் கைது

சேலம்: சேலத்தில் குட்கா விற்பனை செய்ததாக இந்து முன்னணி தலைவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சேலம் அம்மாபேட்டையை சேர்ந்தவர் ஸ்ரீதரன். பெட்டிக்கடைகளுக்கு சிகரெட் விற்பனை செய்து வருகிறார். அதனுடன் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களையும் விற்று வருவதாக அம்மாபேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரை பிடித்து விசாரித்தனர். அதில் அவரிடம் 8 கிலோ குட்கா பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணை நடத்தியபோது, பொன்னமாபேட்டை அண்ணாநகரை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (எ) மாறா கிருஷ்ணமூர்த்தி (56) என்பவர், தனக்கு குட்கா பொருட்கள் கொடுத்ததாக தெரிவித்தார். கிருஷ்ணமூர்த்தி இந்து முன்னணியின் சேலம் கிழக்கு மாவட்ட தலைவராக உள்ளார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அவர் சிகரெட் வியாபாரம் செய்வதுடன் குட்கா பொருட்களையும் விற்பது தெரிந்தது. இதையடுத்து போலீசார் கிருஷ்ணமூர்த்தி, ஸ்ரீதரன் ஆகியோரை கைது செய்தனர்.

* மாட்டிறைச்சி கடை எதிர்த்து தகராறு 3 பேர் சிறையில் அடைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் இந்திரா காந்தி வணிக வளாகத்தில் புதிய மாட்டிறைச்சி கடை திறக்க நேற்று முன்தினம் ஏற்பாடுகள் நடந்தன. அப்போது குடிபோதையில் அங்கு வந்த 3 பேர் இங்கு மாட்டிறைச்சி கடை திறக்கக்கூடாது என்று கூறி தகராறு செய்தனர். இதனையடுத்து கடை உரிமையாளர் அப்துல் சிக்கந்தர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்ததும் பெரியநாயக்கன்பாளையம் டிஎஸ்பி நமச்சிவாயன் மற்றும் போலீசார் சம்பவ  இடத்திற்கு வந்தனர். அங்கு குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட 3 பேரையும் பிடித்தனர். விசாரணையில் அவர்கள் அதே பகுதியை சேர்ந்த சண்முகம் (40), வினோத் (32), முருகன் (48) ஆகியோர் என்பதும், இந்து முன்னணியை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து அவர்களை கைது செய்த போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: