அடைத்துவைத்து சித்ரவதை செய்வதாக வீடியோ வெளியிட்டவர் தொழிலதிபரிடம் ரூ.2 கோடி மோசடி அழகு நிலைய பெண் அதிரடி கைது: கூட்டாளியும் சிக்கினார்-பரபரப்பு தகவல்கள்

பல்லடம்: தன்னை அடைத்து வைத்து சித்ரவதை செய்வதாக வீடியோ வெளியிட்ட அழகு நிலைய பெண் விவகாரத்தில், அவர் கோவை தொழிலதிபரை தொழில் பார்ட்னராக சேர்த்து கொள்வதாக கூறி ரூ.2 கோடி மோசடி செய்தது அம்பலமானது. இது தொடர்பாக அந்த பெண்ணையும் அவரது கூட்டாளியையும் போலீசார் கைது செய்தனர். திருப்பூர் மாவட்டம் பல்லடம் வடுகபாளையம் பகுதியை சேர்ந்தவர் பிரவீனா. இவர் பல்லடத்தில் அழகு நிலையம் நடத்தி வந்தார். இவரது கணவர் சேகர் வெளிநாட்டில் தங்கி வேலை செய்து வருகிறார். இந்நிலையில் பிரவீனாவை கடந்த சில நாட்களாக காணவில்லை என அவரது தாய் பிலோமீனாள் பல்லடம் போலீசில் புகார் அளித்தார். இப்புகாரின் பேரில், பிரவீனாவை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில் சமூக வலைதளங்களில் காணாமல் போன பிரவீனா பேசிய வீடியோ வைரலானது. அந்த வீடியோவில், அழகு நிலையத்திற்கு வாடிக்கையாளராக வந்த தமிழ்ச்செல்வியின் கணவர் சிவக்குமார், டெக்டைல்ஸ் தொழில் செய்யலாம் என சொல்லி தனது பெயரில் உள்ள வீட்டு பத்திரத்தை வாங்கி வங்கியில் அடமானம் வைத்து ரூ.75 லட்சம் கடன் வாங்கியதாகவும், வீட்டு பத்திரம் ஏலத்திற்கு வந்த நிலையில் பணத்தை திருப்பி கேட்க முயன்றபோது தொழில் விஷயமாக வெளியூர் அழைத்து சென்று திருச்சி பகுதியில் தன்னை அடைத்து வைத்து சில பத்திரங்களில் கையெழுத்து பெற்று கொண்டதாகவும் திடுக்கிடும் தகவலை பிரவீனா கூறியிருந்தார்.

மேலும் தன் தாய், தந்தையிடம் தனக்கு அவப்பெயரை ஏற்படுத்தி விட்டனர் எனவும் தன்னை எப்படியாவது காப்பாற்றுங்கள் என்றும், தான் சித்ரவதை செய்யப்படுவதாகவும் கண்ணீர் மல்க பிரவீனா பேசியிருந்தார். வீடியோ தகவல்களின் அடிப்படையில் பல்லடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் கரூரில் நண்பரின் வீட்டில் பதுங்கி இருந்த சிவக்குமாரும், பிரவீனாவும் போலீசில் சிக்கினர். அவர்களை பல்லடத்திற்கு அழைத்து வந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

அப்போது அவர்கள் இருவரும் கோவையை சேர்ந்த ஒருவரிடம் கணவன், மனைவிபோல நடித்து டெக்ஸ்டைல்ஸ் தொழிலில் பார்ட்னராக சேர்த்து கொள்ள ரூ.2 கோடி வாங்கி மோசடி செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து, கோவை தொழிலதிபர் அளித்த புகாரின் பேரில் அழகு நிலைய உரிமையாளர் பிரவீனா, சிவக்குமார் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இதுபோல வேறு யாரிடமாவது இவர்கள் மோசடி செய்துள்ளனரா? என போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Related Stories: