விஜயதசமி நாளில் 30,000 பேர் பள்ளிகளில் சேர்ப்பு: அரசு பள்ளிகள் அசத்தல்

சென்னை: விஜயதசமி நாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும், 37 ஆயிரம் பள்ளிகள் திறக்கப்பட்டு சராசரியாக 30 ஆயிரம் குழந்தைகள் பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் சுமார் 37 ஆயிரம் இயங்கி வருகின்றன. இவற்றில் 1 முதல் 8ம் வகுப்புகளில் 1 கோடி மாணவ- மாணவியர் படித்து வருகின்றனர். கொரோனா முடிந்த பிறகு இந்த ஆண்டு அதிக அளவில் தங்கள் குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்க பெற்றோர் ஆர்வம் காட்டினர். ஜூன் மாதம் பள்ளிகள் திறப்பது வழக்கமாக இருந்தாலும், ஆயுத பூஜைக்கு அடுத்த நாளான விஜய தசமி நாளில் குழந்தைகளை பள்ளிகளில் சேர்த்தால், கல்வி நன்றாக வரும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் விஜய தசமி நாளில் குழந்தைகளை பெற்றோர் பள்ளிகளில் சேர்த்து வருகின்றனர்.

இது தவிர விஜய தசமி நாளில் தங்கள் குழந்தைகளை கோயிலுக்கு அழைத்து சென்று, அங்கு இறைவனை வழிபட்டு தங்கள் குழந்தைகளுக்கு வித்யா ஆரம்பம் என்னும் கல்வியை தொடங்கி வைக்கும் நிகழ்வை நடத்துவதும் வழக்கம். அப்போது, ஒரு தட்டில் அரியை பரப்பி அதில்  தங்கள் குழந்தைகளின் கையை பிடித்து எழுத்துகளை எழுதுவது வழக்கம். இதன்படி, விஜயதசமி நாளான நேற்று, தமிழகம் முழுவதும் அனைத்து கோயில்களிலும் குழந்தைகளுக்கு வித்யாரம்பம் செய்யும் நிகழ்ச்சிகள் கோலாகலமாக நடந்தது. அதனால், தமிழகத்தில் உள்ள 37 ஆயிரம் தொடக்க நடுநிலைப் பள்ளிகள் திறந்து வைக்க வேண்டும் என்றும், ஒன்றாம் வகுப்பில் குழந்தைகளை சேர்க்க வேண்டும் என்றும் தொடக்க கல்வித்துறை இயக்குநர் அறிவொளி உத்தரவிட்டு இருந்தார்.

அதன்படி தமிழகம் முழுவதும் நேற்று 37 ஆயிரம் பள்ளிகள் திறக்கப்பட்டு இருந்தன. பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்தனர். சேர்க்கை கேட்டு வரும் பெற்றோரை வரவேற்று அவர்களின் குழந்தைகளை பள்ளிகளில்  சேர்த்தனர். இதன்படி 38  மாவட்டத்திலும் சராசரியாக 50 மு தல் 100 குழந்தைகள் வரை சேர்க்கப்பட்டனர். இந்த சேர்க்கை இந்த மாதம் இறுதி வரை நடக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுவதால் மொத்த குழந்தைகள் சேர்க்கை எண்ணிக்கை பின்னர் தெரியும். இருப்பினும் நேற்று ஒரு நாளில் மட்டும் 30 ஆயிரம் குழந்தைகள் சேர்ந்துள்ளதாக பள்ளிக் கல்வி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related Stories: