3 பேருக்கு வேதியியல் நோபல் பரிசு

ஸ்டாக்ஹோம்: இந்தாண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு மூவருக்கு பகிர்ந்து அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நோபல் பரிசு, உலகின் மிக உயர்ந்த பரிசாக கருதப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் அமைதி, இலக்கியம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம் மற்றும் மருத்துவ துறைகளில் தலை சிறந்த கண்டுபிடிப்பை பங்களித்தவர்களுக்கு இப்பரிசு வழங்கப்படுகிறது. நோபல் பரிசு ஒரு பதக்கம், சான்றிதழ் மற்றும் ரூ.7.35 கோடி ரொக்கப்பரிசு அடங்கியது. இந்தாண்டு நோபல் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டோருக்கான அறிவிப்பு கடந்த 2ம் தேதி தொடங்கியது. மருத்துவத்துக்கான நோபல் பரிசு சுவீடன் நாட்டை சேர்ந்த ஸ்வந்தே பாபோவுக்கு அறிவிக்கப்பட்டது.

இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இந்தாண்டுக்கான வேதியியலுக்கான நோபல் பரிசு அமெரிக்காவை சேர்ந்த கரோலின், பேரி ஷார்ப்லஸ், டென்மார்க்கை சேர்ந்த மோர்டனுக்கும் பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  உயிர் இயக்கவியலில் மூலக்கூறுகள் மற்றும் செல்களின் ஆய்வுக்காக இவர்களுக்கு இந்த பரிசு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று இலக்கியக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட உள்ளது. அமைதிக்கான நோபல் பரிசு நாளையும், பொருளாதாரத்துக்கான விருது வரும் 10ம் தேதியும் அறிவிக்கப்பட உள்ளன.

* 2வது முறை நோபல் பரிசு

அமெரிக்காவை சேர்ந்த பேரி ஷார்ப்லஸ் கடந்த 2001ம் ஆண்டும் வேதியியலுக்கான நோபல் பரிசு பெற்றுள்ளார். இதன் மூலம், நோபல் பரிசு தொடங்கிய 1901ம் ஆண்டில் இருந்து தற்போது வரை 2 முறை பரிசு பெற்றவர்களின் பட்டியலில் இவருக்கு 5வது இடம் கிடைத்துள்ளது.

Related Stories: