முதல் ஒருநாள் போட்டியில் இன்று இந்தியா - தென் ஆப்ரிக்கா மோதல்

லக்னோ: இந்தியா - ஆப்ரிக்கா மோதும் முதல் ஒருநாள் போட்டி, லக்னோவில் இன்று பிற்பகல் 1.30க்கு தொடங்குகிறது. இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க அணி முதலில் விளையாடிய டி20 தொடரை 1-2 என்ற கணக்கில் பறிகொடுத்தது. முதல் 2 போட்டிகளிலும் அபாரமாக வென்ற இந்தியா 2-0 என முன்னிலை வகிக்க, நேற்று முன்தினம் இந்தூரில் நடந்த 3வது மற்றும் கடைசி டி20 போட்டியில் தென் ஆப்ரிக்கா 49 ரன் வித்தியாசத்தில் வென்றது. ஆறுதல் வெற்றி: ஹோல்கர் ஸ்டேடியத்தில் நடந்த அந்த போட்டியில், டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்துவீச... தென் ஆப்ரிக்கா 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 227 ரன் குவித்தது. டி காக் 68, ரைலீ ரூஸோ 100* (48 பந்து, 7 பவுண்டரி, 8 சிக்சர்) ரன் விளாசினர்.

அடுத்து இமாலய இலக்குடன் களமிறங்கிய இந்தியா 18.3 ஓவரில் 178 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. தினேஷ் கார்த்திக் 46 ரன் (21 பந்து, 4 பவுண்டரி, 4 சிக்சர்), தீபக் சாஹர் 31, பன்ட் 27, உமேஷ் 20*, ஹர்ஷல் 17 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறினர். ரைலீ ரூஸோ ஆட்ட நாயகன் விருதும், சூரியகுமார் யாதவ் தொடர் நாயகன் விருதும் பெற்றனர். அடுத்து இரு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் மோதுகின்றன. முதல் போட்டி லக்னோ வாஜ்பாய் ஸ்டேடியத்தில் இன்று நடைபெறுகிறது. ரோகித் தலைமையிலான இந்திய அணி ஐசிசி டி20 உலக கோப்பை போட்டியில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா செல்வதால், தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில், இந்தியா ஷிகர் தவான் தலைமையில் களமிறங்குகிறது.

இந்தியா: ஷிகர் தவான் (கேப்டன்), ஷ்ரேயாஸ் அய்யர் (துணை கேப்டன்), ஆவேஷ் கான், தீபக் சாஹர், ருதுராஜ் கெயிக்வாட், இஷான் கிஷன், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், முகேஷ் குமார், ரஜத் பத்திதார், ரவி பிஷ்னோய், சஞ்சு சாம்சன், ஷாபாஸ் அகமது, ஷுப்மன் கில், ஷர்துல் தாகூர், ராகுல் திரிபாதி.

தென் ஆப்ரிக்கா: தெம்பா பவுமா (கேப்டன்), டி காக், ரீஸா ஹெண்ட்ரிக்ஸ், ஹெய்ன்ரிச் கிளாஸன், கேஷவ் மகராஜ், ஜானிமன் மலான், எய்டன் மார்க்ரம், டேவிட் மில்லர், லுங்கி என்ஜிடி, அன்ரிச் நோர்க்யா, வேய்ன் பார்னெல், அண்டில் பெலுக்வாயோ, டுவைன் பிரிடோரியஸ், காகிசோ ரபாடா, டப்ரைஸ் ஷம்சி.

நேருக்கு நேர்...

* இந்தியா - தென் ஆப்ரிக்கா அணிகளிடையே இதுவரை 87 ஒருநாள் போட்டிகள் நடந்துள்ளன. அதில் தென் ஆப்ரிக்கா 49 வெற்றியும், இந்தியா 35 வெற்றியும் பெற்றுள்ளன. 3 போட்டிகள் கைவிடப்பட்டுள்ளன.  

* இரு அணிகளும் கடைசியாக மோதிய 5 போட்டியில் தென் ஆப்ரிக்கா 3-1 என முன்னிலை வகிக்கிறது (ஒரு போட்டி ரத்து).

* லக்னோவில் இந்தியா முதல் முறையாக ஒருநாள் போட்டியில் விளையாட உள்ளது. முன்னதாக, 2020ல் இங்கு இந்தியா - தென் ஆப்ரிக்கா மோதவிருந்த ஒருநாள் போட்டி கொரோனாவால் ரத்தானது குறிப்பிடத்தக்கது.

Related Stories: