காங். தலைவர் தேர்தல் என்னை போட்டியிலிருந்து வெளியேற்ற ராகுலிடம் தூது: சசிதரூர் பரபரப்பு குற்றச்சாட்டு

புதுடெல்லி: ‘காங்கிரஸ் தலைவர் தேர்தலில் இருந்து என்னை விலகிக் கொள்ளுமாறு உத்தரவிடக் கோரி, சில கட்சி தலைவர்கள் ராகுலை அணுகி உள்ளனர்,’ என சசிதரூர் குற்றம்சாட்டி உள்ளார். காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தல் வரும் 17ம் தேதி நடக்க உள்ளது. இதில், போட்டியிடும் மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜூனா கார்கே, சசிதரூர் இருவரும் தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர். கேரளாவில் பிரசாரம் செய்வதற்காக தனது சொந்த எம்பி தொகுதியான திருவனந்தபுரம் வந்த சசிதரூர் அளித்த பேட்டியில் கூறியதாவது: காங்கிரஸ் தலைவர் தேர்தலில் இருந்து விலகுமாறு என்னிடம் வலியுறுத்தும்படி,  ராகுல் காந்தியிடம் கட்சியின் சில மூத்த தலைவர்கள் அணுகி உள்ளனர். அவர்களிடம் ‘அவ்வாறு செய்ய மாட்டேன்’ என ராகுல் கூறியதாக என்னிடம் தெரிவித்துள்ளார். கட்சிக்கு நன்மை செய்பவர்களை போட்டியில் இருந்து விலகுமாறு நான் உத்தரவிட மாட்டேன் என ராகுல் மறுத்துள்ளார்.

மேலும், நான் வேட்புமனுவை வாபஸ் பெறக்கூடாது, போட்டியிட வேண்டும் என்றும் ராகுல் கூறி உள்ளார். கட்சித் தலைவர் பதவிக்கு போட்டி இருக்க வேண்டும் என கடந்த 10 ஆண்டாக நான் கூறி வருவதை அவர் எனக்கு நினைவூட்டினார்.

நான் நாக்பூர், வார்தா மற்றும் ஐதராபாத் சென்ற போது அங்கிருந்தவர்கள் என்னை போட்டியிட ஊக்குவித்தனர். நான் பின்வாங்கக் கூடாது என்றனர். ஆனால், மற்ற அனைத்து மாநிலங்களை விட கேரளாவில்தான் எனக்கு அதிக எதிர்ப்பு இருக்கிறது. அகில இந்திய பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் எனக்கு எதிராக பிரசாரம் செய்வதாக பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது. இது உண்மையா என எனக்கு தெரியாது.பெரிய தலைவர்களின் ஆதரவு எனக்கு கிடைக்கும் என நான் எதிர்பார்க்கவில்லை. ஆனால், அனைவரும் ஆதரவும் எனக்கு வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இத்தேர்தலில் கார்கேவுக்குதான் முக்கிய தலைவர்கள் பெரும்பாலானோர் ஆதரவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: