உலகப் புகழ்பெற்ற மைசூரு தசரா நிறைவு நாளில் யானைகள் ஊர்வலம் கோலாகலம்

பெங்களூரு: உலகப் புகழ்பெற்ற தசரா விழாவின் நிறைவு நாளான நேற்று வரலாற்று சிறப்புமிக்க யானைகள் ஊர்வலம் மைசூருவில் கோலாகலமாக நடந்தது. கர்நாடகாவில் மைசூரு மாகாணத்தை ஆட்சி செய்த மன்னர்கள் கடந்த 400 ஆண்டுகளுக்கு முன் நவராத்திரி விழாவை தசரா என்ற பெயரில் ஒவ்வொரு ஆண்டும் பத்து நாட்கள் சிறப்பாக கொண்டாடி வந்தனர். அந்த பழமையான கலாசாரத்தை அழியாமல் காக்கும் வகையில், கர்நாடகா அரசின் சார்பில் ஆண்டுதோறும் தசரா விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்வாண்டு தசரா விழா கடந்த மாதம் 26ம் தேதி தொடங்கியது. இதை ஜனாதிபதி திரவுபதி முர்மு, சாமுண்டீஸ்வரி தேவிக்கு பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

விழாவின் நிறைவு நாளான நேற்று விஜயதசமியை முன்னிட்டு வரலாற்று சிறப்புமிக்க யானைகள் ஊர்வலம் நடந்தது. மைசூரு அரண்மனை வளாகத்தில்  முதல்வர் பசவராஜ்பொம்மை தொடங்கி வைத்தார். சிறப்பு விருந்தினராக மைசூரு மன்னர் யதுவீர கிருஷ்ணதத்த சாமராஜ உடையார், அவரது மனைவி திரிஷிகாகுமாரி, மறைந்த ஸ்ரீகண்டதத்த நரசிம்மராஜ உடையாரின் மனைவி பிரமோதாதேவி, அமைச்சர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். அபிமன்யு என்ற யானை மீது சாமுண்டீஸ்வரி தேவியை 750 கிலோ எடை கொண்ட தங்க சிம்மாசனத்தில் அமர்த்தி ஊர்வலமாக  புறப்பட்டது. அபிமன்யூவை பின்தொடர்ந்து 13 யானைகள் அணிவகுத்து சென்றது. பின்னால் குதிரைப்படை, காலாட்படை வீரர்கள் அணிவகுத்து சென்றனர். அதை தொடர்ந்து அலங்கார ஊர்திகளின் அணி வகுப்பு சென்றது. முக்கிய வீதிகள் வழியாக பன்னிமண்டபத்தை மாலை 7.30 மணிக்கு அடைந்தது. அத்துடன் தசரா விழா நிறைவு பெற்றது.

Related Stories: