×

வள்ளலார் பிறந்த நாள் தனிப்பெரும் கருணை நாளாக கடைப்பிடிப்பு ஆன்மிகத்துக்கு எதிரானது அல்ல திமுக: சென்னையில் நடந்த முப்பெரும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: திராவிட மாடல் ஆட்சி என்பது  ஆன்மிகத்துக்கு எதிரானது என்று மதத்தை வைத்து பிழைக்கக்கூடிய சிலர்  நாட்டிலே பேசி வருகிறார்கள். திமுக ஆன்மிகத்துக்கு எதிரான கட்சி அல்ல என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
இந்து அறநிலையத்துறை சார்பில் சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள கபாலீஸ்வரர் - கற்பகாம்பாள் திருமண மண்டபத்தில் வள்ளலார் முப்பெரும் விழா நேற்று நடந்தது. இந்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு, வள்ளலார்-200 இலச்சினை, தபால் உறை மற்றும் சிறப்பு மலர் ஆகியவற்றை வெளியிட்டார்.

இதைத்தொடர்ந்து 52 வாரங்கள் நடைபெறும் விழாக்களில் முதல் வார நிகழ்ச்சிகளையும், ஆண்டு முழுவதும் அன்னதானம் வழங்கும் நிகழ்வையும் தொடங்கி வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:  பெரியார் பிறந்தநாளை சமூகநீதி நாளாகவும், அம்பேத்கர் பிறந்தநாளை சமத்துவ நாளாகவும் அறிவித்த நமது திராவிட மாடல் அரசு, ‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்’ என்ற திருவருட்பிரகாச வள்ளலாரின் பிறந்தநாளை, தனிப்பெரும் கருணை நாளாக அறிவித்து இருக்கிறது. வள்ளலார் பிறந்து 200 ஆண்டுகள், அவர் தொடங்கிய தரும சாலைக்கு 156 ஆண்டுகள், அவர் ஏற்றிய தீபத்திற்கு 152 ஆண்டுகள் ஆகியவற்றை இணைத்து முப்பெரும் விழாவாக நாம் நடத்திக் கொண்டு இருக்கிறோம். இந்த நிகழ்ச்சி நடப்பதை பார்த்து சிலருக்கு ஆச்சர்யமாக இருக்கலாம். ஏன், அதிர்ச்சியாக கூட இருக்கலாம். என்னை பொறுத்தவரையில், சிலர் சொல்லி வரும் அவதூறுகளுக்கு பதில் சொல்லக்கூடிய விழா தான் இந்த விழா.

 திராவிட மாடல் ஆட்சி என்பது ஆன்மிகத்துக்கு எதிரானது, திராவிட மாடல் ஆட்சியானது மக்களின் நம்பிக்கைகளுக்கு எதிரானது என்று மதத்தை வைத்து பிழைக்கக்கூடிய சிலர் நாட்டிலே பேசி வருகிறார்கள். மீண்டும் இதை நான் குறிப்பிட்டு சொல்ல ஆசைப்படுகிறேன். ஏனென்றால், முன்னால் சொன்னதை மட்டும் எடுத்துக் கொண்டு, பின்னால் சொன்னதை வெட்டிவிட்டு சில சமூக ஊடகங்கள் வெளியிடும். அதனால் முன்கூட்டியே நான் அதை உங்களுக்கு சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். ஆக, நான் தெளிவோடு சொல்ல விரும்புவது, ஆன்மிகத்திற்கு எதிரானது அல்ல, திமுக. ஆன்மிகத்தை அரசியலுக்கும், தங்களது சொந்த சுயநலத்துக்கும் உயர்வு-தாழ்வு கற்பிப்பதற்கு மட்டுமே பயன்படுத்தி கொள்பவர்களுக்கு எதிரானது தான் இந்த திராவிட மாடல் திமுக ஆட்சி.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற திராவிடத்தின் மூலக் கருத்தியலை முதலில் சொன்னவர் அய்யன் வள்ளுவர். சாதியும் மதமும் சமயமும் பொய்யென ஆதியில் உணர்த்தியவர் அருட்பெருஞ்சோதி இராமலிங்க அடிகளார். ‘‘சாதி மதம் சமயமெனும் சங்கடம்விட்டு அறியேன் சாத்திரச் சோறாடுகின்ற சஞ்சலம்விட்டு அறியேன்’’ எனப் பாடியவர் அவர். வள்ளலார் நகரை உருவாக்கியவர் நம்முடைய முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர். ஆட்சி பொறுப்பேற்றதும் வள்ளலார் பிறந்தநாளை தனிப்பெரும் கருணை நாளாக அறிவித்து நாம் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.

சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக திமுகவின் சார்பில் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் 419வது வாக்குறுதியாக ‘வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம்’ அமைக்கப்படும் என்று சொல்லி இருக்கிறோம்’. ‘‘சாதி சமய நல்லிணக்கத்தை பேணும் வகையில், திருவருட்பிரகாச வள்ளலாரின் சமரச சுத்த சன்மார்க்க போதனைகளை போற்றக்கூடிய வகையில் இது அமையும்’’ என்று அந்த வாக்குறுதியில் சொல்லப்பட்டிருக்கிறது. அதனை எப்படி அமைப்பது என்பது குறித்து ஒரு சிறப்பான வல்லுநர் குழு ஆலோசனை பெறப்பட்டுள்ளது. பலமுறை நம்முடைய அமைச்சர் சேகர்பாபு அந்த இடத்துக்கு சென்று பார்வையிட்டு, ரூ.100 கோடி மதிப்பீட்டில் இதனை அமைப்பதற்கான பெருந்திட்ட வரைவு திட்டம் தயாரிக்கும் பணி தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

விரைவில் கட்டுமான பணிகள் தொடங்கும். அந்த வரிசையில்தான், நாம் இந்த முப்பெரும் விழாவை கொண்டாடி கொண்டிருக்கிறோம். இதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த குழுவினருடன் நானும் பல ஆலோசனைகளை செய்திருக்கிறேன். விழா ஏற்பாடுகளெல்லாம் சிறப்பாக செய்யப்பட்டிருக்கிறது. 52 வாரங்களுக்கு முப்பெரும் விழா பல்வேறு நகரங்களில் நடக்க இருக்கிறது. இந்த நேரத்தில் நான் ஒரு மகிழ்ச்சியான செய்தியை உங்களுக்கு தெரிவிக்க விரும்புவது, ஓராண்டிற்கு தொடர் அன்னதானம், பேச்சாளர்களுக்கு சன்மானம் உள்ளிட்ட இந்த விழாவிற்கு ரூ.3 கோடியே 25 லட்சம் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

நூலாசிரியர், உரையாசிரியர், பதிப்பாசிரியர், பத்திரிகையாசிரியர், போதகாசிரியர், ஞானாசிரியர், வியாக்கியான கர்த்தர், சித்தமருத்துவர், சீர்திருத்தவாதி, கவிஞர், ஞானி இப்படி எல்லாமுமாக இருந்தவர் வள்ளலார். தனது கொள்கையை சமரச சன்மார்க்கமாக வடிவமைத்தார். அந்த கொள்கையை செயல்படுத்த சமரச சன்மார்க்க சங்கம் தொடங்கினார். அந்த சங்கத்துக்காக சன்மார்க்க கொடி உருவாக்கினார். அந்த சங்கத்துக்காக ‘அருட்பெருஞ்சோதி தனிப்பெரும் கருணை’ என்ற ஆன்ம நெறியை உருவாக்கினார். அதற்காக சத்திய ஞானசபையை உருவாக்கினார்.

வள்ளலார் வழியில் நடக்கக்கூடிய இந்த அரசானது, காலை உணவு திட்டத்தை தொடங்கி இருக்கிறது. பசியுடன் பள்ளிக்கு வரும் பிள்ளைகளுக்கு உணவளிக்கும் திட்டமானது மணிமேகலையில் அமுதசுரபியின் தொடர்ச்சியாக, வள்ளலார் மூட்டிய அணையா அடுப்பின் தொடர்ச்சியாக, தமிழ்நாடு அரசால் தொடங்கப்பட்டிருக்கிறது. பசிப்பிணி போக்குதலும் - அறிவுப்பசிக்கு தீனி போடுதலும் இந்த அரசினுடைய முதன்மை கொள்கைகள். அண்ணா சொன்னபடி ‘ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம்’, சமுதாயத்தில் ஏற்றத்தாழ்வு இருக்கக் கூடாது.

சோறு போடுவது - அன்னதானம் வழங்குவது மட்டுமே அவரது அறநெறி அல்ல. சாதி, மத வேறுபாடுகளற்ற சமநிலை சமூகம் அமைக்க பாடுபடுவதுதான் வள்ளலாருடைய வழியில் நடப்பது. ஒத்தாரும் உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் எவரும் ஒருமை உளராகி உலகியல் நடத்த வேண்டும் - என்பதே அவரது அறநெறி. அத்தகைய அறநெறி உலகத்தை படைக்க உறுதியேற்போம். அதற்காக உழைப்போம். இவ்வாறு அவர் பேசினார். இந்த விழாவில் அமைச்சர்கள் கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு மற்றும் தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி., த.வேலு எம்.எல்.ஏ., சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை செயலாளர் சந்தரமோகன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன், கூடுதல் ஆணையர் இரா.கண்ணன், அருட்பிரகாச வள்ளலார் முப்பெரும் விழாவின் சிறப்பு குழு தலைவர் பி.கே.கிருஷ்ணராஜ் வானவராயர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

சேகர்பாபுவை பாராட்டிய முதல்வர்: கோட்டைக்கு வருவதைவிட கோயிலுக்கு அதிகம்  போகக்கூடியவர் தான் நம்முடைய சேகர்பாபு. காரணம், அறப்பணிகள் முறையாக நடைபெறுகிறதா என்பதை பார்ப்பதைத்தான் அமைச்சர்
சேகர்பாபு அதிகம் செய்து கொண்டு இருக்கிறார். ஆன்மிக சொற்பொழிவாளர்கள், நாள்தோறும் தாங்கள் எந்த  கோயிலுக்கு சென்று சொற்பொழிவு ஆற்ற வேண்டும் என்று பட்டியல் போட்டு வைத்திருப்பார்கள். அதைப்போல, தினமும் ஒரு கோயிலுக்கு அல்ல, ஒரு நாளைக்கு மூன்று ஊர்களில் இருக்கக்கூடிய கோயிலை சுற்றி வரக்கூடியவர் தான் நம்முடைய  அமைச்சர் சேகர்பாபு. என்னால் ‘செயல்பாபு’ என்று அழைக்கப்படுகின்ற அமைச்சர் சேகர்பாபு இன்றைக்கு அவர் ஏற்றுக்கொண்டிருக்கக்கூடிய பொறுப்பை நான் பாராட்டுவதைவிட, எங்கள் கட்சியை சார்ந்தவர்கள், எங்கள் அமைச்சர்கள் பாராட்டுவதைவிட, நீங்கள் பாராட்டுவதுதான் எங்களுக்கு சிறப்பு. நீங்களெல்லாம் ஆன்மிக சொற்பொழிவாளர்கள் என்று சொன்னால் - இவர் ஆன்மிக செயற்பாட்டாளர். அதுதான் வித்தியாசம். இதுதான் திராவிட மாடல் ஆட்சியின் புகழுக்கும், சிறப்புக்கும் காரணமாக அமைந்திருக்கிறது என்று முதல்வர் கூறினார்.

* வள்ளலார் பிறந்து 200 ஆண்டுகள், அவர் தொடங்கிய தரும சாலைக்கு 156 ஆண்டுகள், அவர் ஏற்றிய தீபத்திற்கு 152 ஆண்டுகள் ஆகியவை இணைத்து முப்பெரும் விழாவாக நடக்கிறது.
* ஆன்மிகத்தை அரசியலுக்கும், தங்களது சொந்த சுயநலத்துக்கும் உயர்வு-தாழ்வு கற்பிப்பதற்கு மட்டுமே பயன்படுத்தி கொள்பவர்களுக்கு எதிரானது தான் திராவிட மாடல் ஆட்சி.
* வள்ளலாரை பற்றி 52 வாரங்களுக்கு முப்பெரும் விழா பல்வேறு நகரங்களில் நடக்க இருக்கிறது.

Tags : Vallalar ,DMK ,Chief Minister ,M.K.Stal ,Chennai , Observing Vallalar's birthday as a special day of mercy is not against spirituality: DMK Chief Minister M.K.Stal's speech at the three-day function in Chennai
× RELATED வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க எதிர்ப்பு..!!