கஞ்சா உள்ளிட்ட போதை பொருள் சம்பந்தமாக ஒரு நாள் சிறப்பு சோதனை: 4 குற்றவாளிகள் கைது

சென்னை: சென்னை பெருநகரில், காவல் ஆணையாளர் உத்தரவின்பேரில், கஞ்சா உள்ளிட்ட போதை பொருள் சம்பந்தமாக ஒரு நாள் சிறப்பு சோதனை மேற்கொண்டு, 4 வழக்குகள் பதிவு செய்து 4 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.

கஞ்சா மற்றும் போதை வழக்குகளில் கைதான 39 குற்றவாளிகளிடம் நன்னடத்தை பிணை ஆவணம் பெற்று, 30 குற்றவாளிகள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. தலைமறைவாக இருந்த 15 குற்றவாளிகள் பிடிபட்டனர்.

தமிழக முதலமைச்சர் அவர்களின் ’’போதையில்லா தமிழகம்’’ என்ற திட்டத்தினை அமல்படுத்தி, சென்னை பெருநகரில் போதைப் பொருள் நடமாட்டத்தை முற்றிலும் ஒழிக்க சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் உத்தரவின்பேரில், போதைக்கெதிரான தடுப்பு நடவடிக்கை (Drive Against Drugs (DAD) என்ற சிறப்பு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, கஞ்சா கடத்தி வருபவர்கள், பதுக்கி வைப்பவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்கள் கண்காணித்து கைது செய்யப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    

இதன் தொடர்ச்சியாக, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள், கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது குற்றத் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளவும், போதைக்கெதிரான தடுப்பு நடவடிக்கை (Drive Against Drugs (DAD) மேற்கொள்ளவும் உத்தரவிட்டதன்பேரில், நேற்று (03.10.2022) கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களுக்கு எதிராகவும், கஞ்சா வழக்கு குற்றவாளிகள் மீதும் ஒரு நாள் சிறப்பு தணிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    

நேற்று நடைபெற்ற சோதனையில், கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்தது தொடர்பாக 4 வழக்குகள் பதிவு செய்து, 4 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 1.85 கிலோ கஞ்சா மற்றும் 1 இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

    

நேற்று (03.10.2022) ஒரே நாளில் கஞ்சா வழக்குகளில் தொடர்புடைய 298 குற்றவாளிகள் நேரில் சென்று கண்காணித்து, மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபடாமல் தடுக்க அறிவுரைகள் வழங்கப்பட்டது. மேலும், 39 குற்றவாளிகள் திருந்தி வாழ்வதற்கு நன்னடத்தை பிணை ஆவணம் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன், தலைமறைவாக இருந்த 15 குற்றவாளிகள் பிடிபட்டனர்.

கடந்த 17.09.2022 முதல் 02.10.2022 வரை கஞ்சா வழக்குகளில் தொடர்புடைய 177 குற்றவாளிகள் மீது குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், நேற்று (03.10.2022) ஒரே நாளில் மட்டும் 30 கஞ்சா வழக்கு குற்றவாளிகள் மீது குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டது. ஆக மொத்தம் கடந்த 17 நாட்களில் 208 குற்றவாளிகள் மீது குற்றப்பத்திரிகைள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    

காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவின்பேரில், சென்னை பெருநகரில் பொதுமக்கள் நலன் மற்றும் பாதுகாப்பிற்காக, பல்வேறு குற்றத் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், சென்னை பெருநகரில் போதை பொருட்கள் மற்றும் குட்கா புகையிலை பொருட்களை முற்றிலும் ஒழிக்கும் பொருட்டு, இது போன்ற சிறப்பு சோதனைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிப்பதுடன், குற்ற பின்னணி நபர்கள் மற்றும் போதை, குட்கா பொருட்கள் கடத்தி வருபவர்கள், பதுக்கி வைப்பவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல் ஆணையாளர்  திரு.சங்கர்ஜிவால், இ.கா.ப  அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Related Stories: