வயலில் சடலம் தூக்கி வீசப்பட்ட நிலையில் 17 வயது சிறுமி பலாத்கார கொலை?: உத்தரபிரதேசத்தில் பயங்கரம்

லக்னோ: உத்தரபிரதேசத்தில் 17 வயது சிறுமியின் உடலை வயலில் கைப்பற்றிய போலீசார், அந்த சிறுமியின் மரணம் குறித்து தீவிர விசாரணையை மேற்கொண்டுள்ளனர். உத்தரபிரதேச மாநிலம் அவுரையா அடுத்த திபியாபூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் நிர்வாண நிலையில் 17 வயது சிறுமி உடலை போலீசார் மீட்டுள்ளனர். முன்னதாக அந்த சிறுமியின் பெற்றோர், தங்களது மகள் மாயமானது குறித்து போலீசில் புகார் அளித்திருந்தனர். அதன் அடிப்படையில் போலீசார் அந்த சிறுமியை தேடி வந்தனர். தற்போது நிர்வாண நிலையில் வயலில் இருந்து சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டதால், அந்த சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து திபியாபூர் போலீசார் கூறுகையில், ‘நிர்வாண நிலையில் மீட்கப்பட்ட சிறுமியின் சடலத்தின் கழுத்தில் துப்பட்டாவால் இறுக கட்டப்பட்டிருந்தது. கிட்டதட்ட 30 முதல் 40 மீட்டர் தூரத்திற்கு சிறுமியை தரதரவென்று இழுத்துச் சென்று வயலில் தூக்கி வீசியுள்ளனர். ஆனால் சிறுமியின் உடலில் காயம் ஏதும் இல்லை. தடயவியல் நிபுணர்களுடன் சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்து வருகின்றனர். சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. அதன் அறிக்கை கிடைத்த பின்னரே மேல் விசாரணை நடத்தப்படும். சிறுமியின் பெற்றோர் தரப்பில் இதுவரை குற்றம் சாட்டப்பட்டவர்கள் குறித்து யாருடைய பெயரையும் குறிப்பிடவில்லை. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது’ என்றனர்.

Related Stories: