செல்போனில் ஆபாச வீடியோக்களை பார்ப்பதாக கூறி நகை கடை ஊழியரிடம் நூதன முறையில் பணம் அபேஸ்: 4 பேர் அதிரடி கைது; 4சிம்கார்டு, போலி வங்கி பாஸ்புக் பறிமுதல்

கிருஷ்ணகிரி: செல்போனில் ஆபாச வீடியோக்களை பார்ப்பதாக கூறி நகை கடை ஊழியரிடம் நூதன முறையில் பணம் அபேஸ் செய்த 4 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள பேரிகை பகுதியை சேர்ந்தவர் சந்திரகுமார். ஓசூரில் உள்ள நகை கடையில் வேலை பார்த்து வருகிறார். இவரின் செல்போனுக்கு நேற்று முன்தினம் போன் அழைப்பு வந்தது.

அதில் பேசிய நபர், ‘சென்னை சைபர் கிரைம் அலுவலகத்தில் இருந்து பேசுவதாகவும், நீங்கள் குழந்தைகளின் ஆபாச வீடியோக்களை பார்த்து வருவதாக புகார் வந்துள்ளது. இதுகுறித்து உயரதிகாரிகள் நடவடிக்கை எடுக்கும் படி கூறியுள்ளனர்’ என தெரிவித்தார். மேலும் இந்த வழக்கில் இருந்து தப்பிக்க வேண்டும் என்றால் 10 ஆயிரம் ரூபாய் போன் பே மூலம் அனுப்பி வைக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சந்திரகுமார், உடனடியாக போன் பே மூலம் 3 தவணையாக 10 ஆயிரம் ரூபாயை அனுப்பி வைப்பதாக தெரிவித்து பணத்தையும் அனுப்பி வைத்தார். பின்னர் அந்த நம்பரை மீண்டும் தொடர்பு கொண்டபோது ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால் தான் ஏமாற்றப்பட்டிருப்பதை அறிந்த அவர் கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து சந்திரகுமாரின் போனுக்கு வந்த செல்போன் எண்ணை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அதில் அந்த சிம் கார்டு வாங்கும் போது கொடுக்கப்பட்டிருந்த முகவரி போலி என தெரியவந்தது.

தொடர்ந்து பணம் எடுத்துள்ள வங்கி விவரத்தை கொண்டு விசாரித்ததில் சேலம் கரட்டூரை சேர்ந்த மணி (33) என்பவர் இந்த நூதன மோசடியில் ஈடுபட்டிருப்பது தெரிந்தது. அவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அதில், அவருக்கு உடந்தையாக நண்பர்களான தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சுங்கரஅள்ளியை சேர்ந்த மால்வின் (22), தர்மபுரி கீழ் வீதி மாரியப்பன் (38), கிருஷ்ணகிரி சாப்பரத்தி வேடியப்பன் (28) ஆகியோரும் இருந்தது தெரிந்தது.

இதையடுத்து மணி உள்பட 4 பேரையும் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். தொடர்ந்து விசாரித்ததில், யூடியூப்பில் உள்ள போலீசாரின் வாக்கி டாக்கி போன்ற ஆடியோவை பதிவிறக்கம் செய்து காவல்நிலையத்தில் இருந்து பேசுவது போன்ற சூழ்நிலையை ஏற்படுத்தி கொண்டு இந்த நூதன மோசடியில் ஈடுபட்டிருப்பது தெரிந்தது. இவர்களிடமிருந்து 3 போலி வங்கி கணக்கு புத்தகங்கள், 3 செல்போன், 4 சிம்கார்டு, 6 ஆயிரம் ரூபாய் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து இதுபோன்று வேறு யாரிடமாவது நூதன முறையில் மோசடியில் ஈடுபட்டுள்ளனரா என தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Related Stories: