குவைத்தில் சிக்கி தவிக்கும் பெண்ணை மீட்க நடவடிக்கை: அமைச்சர் செஞ்சி மஸ்தான் உறுதி

தண்டையார்பேட்டை: முதல்வர் வழிகாட்டுதலின் பேரில் குவைத்தில் சிக்கிதவிக்கும் பெண்ணை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என  அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறியுள்ளார். தண்டையார்பேட்டை கருணாநிதி நகர் 4வது தெருவை சேர்ந்தவர் ஜேம்ஸ்பால் (45). கூலி தொழிலாளி. இவரது மனைவி புவனா (39). இவர்களுக்கு விசினா (16), கிரேசி (14)  என்ற 2 மகள்கள்  உள்ளனர். குடும்ப கஷ்டம் காரணமாக கடந்த 8 மாதங்களுக்கு முன்பு குவைத் நாட்டுக்கு வேலைக்கு சென்றார் புவனா.

இந்நிலையில் புவனா, தன்னை கொடுமைப்படுத்துவதாகவும், 20 மணி நேரம் வேலை வாங்குவதாகவும், பாத்ரூமில் தங்க வைத்துள்ளதாகவும், தன்னை காப்பாற்றும்படியும் கண்ணீர் மல்க செல்போனில் வீடியோ  பதிவு செய்து ஜேம்ஸ்பாலுக்கு அனுப்பியுள்ளார். இதை பார்த்து ஜேம்ஸ்பால் மற்றும் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். உடனே தனியார் தொண்டு நிறுவனங்களின் உதவியை நாடினார். இருந்தபோதிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதனால் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கண்ணீர் மல்க ஜேம்ஸ்பால் கோரிக்கை வைத்துள்ளார்.

இதுகுறித்து ஜேம்ஸ் பால் கூறுகையில், குடும்ப கஷ்டம் மற்றும் ரூ.1 லட்சம் கடன் இருப்பதால் வெளிநாடு சென்று பணம் சம்பாதிக்கலாம் என கடந்த 8 மாதங்களுக்கு முன்பு எனது மனைவி புவனா குவைத் சென்றார். அங்கு சென்றவுடன், ‘துப்புரவு பணி, மாதம் 25 ஆயிரம் ரூபாய் சம்பளம்’ என கூறினார். சில நாட்களில் தன்னை கொடுமைப்படுத்தப்படுவதாகவும், உணவு கூட வழங்காமல் பாத்ரூமில் தங்கவைத்து அடித்து துன்புறுத்துவதாகவும் கண்ணீர்மல்க வீடியோ பதிவு செய்து அனுப்பினார். இதனால் மிகுந்த மனவேதனையில் உள்ளோம். முதல்வர் கருணை உள்ளம் கொண்டு எங்களுக்கு உதவி செய்யவேண்டும்’ என்றார்.

இதுகுறித்து வெளிநாடு வாழ் தமிழர்கள் நல துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான்  நிருபர்களிடம் கூறுகையில், ‘இந்த தகவலை  தமிழக முதல்வர் அறிந்ததும் குவைத்தில் சிக்கியுள்ள பெண்ணை மீட்க நடவடிக்கை எடுக்கும்படி என்னிடம் கூறியுள்ளார்.  அவரது வழிகாட்டுதலின் பேரில்  பெண்ணை மீட்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்லும் பலர் பாதிக்கப்படுகிறார்கள். ஒரு சிலர் அங்கிருந்து வந்து விடுகிறார்கள். ஒரு சிலரை சமூக அமைப்பினர் மீட்டு வருகிறார்கள். அங்கு சிக்கி தவிப்பவர்களை மீட்க ஒன்றிய அரசு தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என்றார்.

Related Stories: