பெரம்பலூரில் பரபரப்பு; அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 23 பேரிடம் ரூ.1.83 கோடி மோசடி: துறையூரை சேர்ந்தவர் கைது

பெரம்பலூர்: அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 23 நபரிடம் 1 கோடியே 83 லட்சம் பண மோசடியில் ஈடுபட்ட துறையூர் வாலிபரை பெரம்பலூர் போலீசார் கைது செய்தனர். திருச்சி மாவட்டம், துறையூர் சிங்களாந்தபுரத்தை சேர்ந்தவர் பிரகாஷ் (44). இவர் ஹோம் அன்ட் ரூரல் டெவலப்மெண்ட் துறையில் இணை செயலாளராக வேலை பார்த்து வருவதாகவும். ஐஏஎஸ் அதிகாரிகள் தனக்கு நெருங்கிய நண்பர்கள் என கூறி பெரம்பலூர் ரோஸ் நகரை சேர்ந்த ராஜேந்திரன் மகன் மோகன்பாபுவிற்கு (25), ஹெல்த் இன்ஸ்பெக்டர் வேலை வாங்கி தருவதாகவும், இவரது மனைவி சாருமதிக்கு (22) விஏஓ வேலை வாங்கி தருவதாகவும் கூறியுள்ளார்.

இதனை நம்பிய மோகன்பாபு கடந்த 2020ம் ஆண்டு மே 11ம் தேதி ரூ.60 லட்சம் வங்கி மூலம் பிராகாசுக்கு கொடுத்துள்ளார். மேலும் மோகன்பாபுவின் நண்பர்கள் மற்றும் உறவினர்களான கடலூர் மாவட்டம் ஆனந்தகுடி சுதர்சனுக்கு (32) உதவி திட்ட இயக்குனர் வேலையும், அரியலூர் மாவட்டம், செந்துறை கலையரசிக்கு ஹெல்த் இன்ஸ்பெக்டர் வேலையும், பெரம்பலூர் மாவட்டம், கீழப்புலியூர் ராஜலிங்கத்திற்கு (33) உதவி திட்ட இயக்குனர் வேலையும், உளுந்தூர்பேட்டை பார்த்திபனுக்கு (24) உதவி திட்ட இயக்குநர் வேலையும், நாமக்கல் கலைவாணிக்கு (33) உதவி திட்ட இயக்குநர் வேலையும், சேலம் மாவட்டம், தம்மம்பட்டி மதனுக்கு மின்இளநிலை பொறியாளர் வேலையும் வாங்கி தருவதாகவும் பிரகாஷ் கூறியுள்ளார்.

இதன்படி மோகன்பாபுவின் உறவினர் மற்றும் நண்பர்கள் என மொத்தம் 23 நபர்களுக்கும் வேலை வாங்கி தருவதாக கூறி மோகன்பாபு, ரூ.1 கோடியே 83 லட்சம் பணத்தை பிரகாஷிடம் கொடுத்துள்ளார். ஆனால் வேலை வாங்கி தராமல் பிரகாஷ் தலைமறைவாகி விட்டார். இதனால் பெரம்பலூர் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் மோகன்பாபு புகார் செய்தார்.

இந்நிலையில் பணம் கொடுத்த நபர்கள், மோகன் பாபுவிடம் பணத்தை கேட்டு தொந்தரவு செய்தனர். அதனால், மோகன்பாபு மற்றும் அவரது மனைவி ஆகியோர் கடந்த 29ம் தேதி பிரகாசை  சென்னை கோயம்பேட்டிலிருந்து காரில் பெரம்பலூருக்கு அழைத்து வந்து தங்களது வீட்டில் அடைத்து வைத்து பணத்தை கேட்டனர். இதையறிந்த பிரகாஷின் அண்ணன் பால்செல்வன், மனைவி ஆரோக்கியமேரி ஆகியோர் நேற்று மாலை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து தகவலை தெரிவித்தனர். உடனே பெரம்பலூர் போலீசார் விரைந்து சென்று பிரகாஷை கைது செய்தனர். மோகன்பாபுவை அழைத்து வந்து விசாரித்தனர்.

இதில், ஹோம் அன்ட் ரூரல் டெவலப்மெண்ட் துறையில் பிரகாஷ் வேலை பார்க்கவில்லை என்பம், அவர் கூறிய இருவர் ஐஏஎஸ் அதிகாரிகளே கிடையாது என்பதும், அந்த ஐஏஎஸ் அதிகாரிகளும் பண மோசடி வழக்கில் சென்னையில் கைதானவர்கள் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்கு பதிந்து பிரகாஷை கைது செய்தனர். பின்னர் பெரம்பலூர் குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: