கோயம்பேடு பேருந்து நிலையத்தில் மயங்கி கிடந்தார்; பிரபல சின்னத்திரை நடிகர் லோகேஷ் விஷம் குடித்து தற்கொலை: காதல் மனைவி பிரிந்து சென்றதால் விபரீத முடிவு

சென்னை: தனது காதல் மனைவி பிரிந்து சென்றதால் மனமுடைந்த பிரபல சின்னத்திரை நடிகர் லோகேஷ் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் சின்னத்திரை நடிகர்கள் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் லோகேஷ்(31). இவர் தற்போது சென்னை வில்லிவாக்கம் திருவீதியம்மன் கோயில் தெருவில் வசித்து வந்தார்.

குழந்தை நட்சத்திரமாக கடந்த 1990களில் சின்னத்திரையில் அறிமுகமான இவர், ‘மர்ம தேசம், ஜீ பூம்பா உள்ளிட்ட மெகா தொடர்களில் நடித்து மக்களிடையே அறிமுகமானவர். தற்போது சின்னத்திரையில் பிரபல நடிகராக வளர்ந்துள்ளார். லோகேஷ், அனிஷா(28) என்பவரை 4 ஆண்டுகள் காதலித்து கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

காதல் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி இருவருக்கும் தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் நடிகர் லோகேஷ் போதை பழக்கத்திற்கு அடிமையானதாக கூறப்படுகிறது. இதற்கிடையே லோகேஷ் தனது இயக்கத்தில் புதிய படம் ஒன்று எடுக்க முயற்சி செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தனது காதல் மனைவி அனிஷாவுடன் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார். அனிஷா தனது 2 மகன்களுடன் காட்டுப்பாக்கத்தில் பெற்றோருடன் வசித்து வருகிறார். தனது காதல் மனைவி பிரிந்து சென்ற மன வருத்தத்தால் லோகேஷ் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

கடந்த 30ம் தேதி தனது மனைவிக்கு போன் செய்து நாம் இருவரும் சேர்ந்து வாழலாம் என்று அழைத்துள்ளார். அதற்கு அனிஷா போதை பழக்கத்தை விடும் வரை உன்னுடன் நான் சேர்ந்து வாழ மாட்டேன் என்று கூறி செல்போன் இணைப்பை துண்டித்ததாக கூறப்படுகிறது.

மனமுடைந்த லோகேஷ் கடந்த 1ம் தேதி இரவு கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளார். மீண்டும் தனது காதல் மனைவிக்கு குழந்தைகளை பார்க்க வேண்டுமென்று  போன் செய்துள்ளார். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை. இதனால் மனமுடைந்த நடிகர் லோகேஷ் கையில் கொண்டு வந்த விஷத்தை குடித்து கோயம்பேடு பேருந்து நிலையத்திலேயே மயங்கிவிழுந்துள்ளார்.

இதை பார்த்த பொதுமக்கள் யாரோ குடிபோதையில் மயங்கி இருப்பதாக கோயம்பேடு பேருந்துநிலையத்தில் உள்ள போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்படி போலீசார் வந்து பார்த்த போது, லோகேஷ் விஷம் குடித்து மயங்கி கிடந்தது தெரியவந்தது. உடனே 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் போலீசார் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த நடிகர் லோகேஷ் நேற்று இரவு உயிரிழந்தார்.

பின்னர் சம்பவம் குறித்து கோயம்பேடு போலீசார் வழக்கு பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து மனைவி அனிஷா மற்றும் நடிகர் லோகேஷின் பெற்றோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். கோயம்ேபடு பேருந்து நிலையத்தில் சின்னத்திரை நடிகர் ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சின்னத்திரை நடிகர்கள் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: