×

பிளாஸ்டிக் பாதி... உணவு பாதி...

சமீப ஆண்டுகளாக பிளாஸ்டிக்கை அதிகம் பயன்படுத்தி பழக்கப்பட்டு விட்டோம்.  உடனடியாக பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைப்பது சாத்தியமில்லை. ஆனால், முதல்கட்டமாக உணவுப் பொருளோடு கலந்திருக்கும் பிளாஸ்டிக் பயன்பாட்டை கண்டிப்பாக தவிர்த்தாக வேண்டும். உலக அளவில் பிளாஸ்டிக் பயன்பாட்டில் இந்தியா மூன்றாம் இடத்தில் இருக்கிறது. இதன் பயன்பாடு இன்றைக்கு உணவு முறையோடு கலந்திருப்பதுதான் ஆபத்திலும் ஆபத்தாக இருக்கிறது.

பிளாஸ்டிக் ஒரு பெட்ரோலிய பொருள். மேலும் Polycarbonate, Bisphenol A, Polystyrene, Chloride, Polyvinyl chloride மற்றும் Phthalates போன்ற வேதிப்பொருட்களால் பிளாஸ்டிக் பொருள் தயாரிக்கப்படுகிறது. இவ்வாறு தயாரிக்கப்படுகிற பிளாஸ்டிக்கின் பயன்பாடு நம்மிடையே மூன்று இடங்களில் பயன்படுகிறது. ஒன்று உணவு பொருட்களோடு இரண்டு ஃபர்னிச்சர் மற்றும் இதர உபகரணங்கள் பயன்பாடு, மூன்று மருத்துவம் சார்ந்த பயன்பாடு. இதில் உணவுப் பொருளோடு பிளாஸ்டிக் இருப்பதில்தான் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

உணவுப் பொருள் பயன்பாட்டில் இரண்டு வகைகளில் இருக்கிறது 1. சூடான உணவு பொருள் 2. குளிர்ந்த உணவுப் பொருள். முக்கியமாக சூடான உணவுப் பொருட்களை திட உணவாகவோ, திரவ உணவாகவோ பிளாஸ்டிக்கை பயன்படுத்தி எடுத்துக் கொள்ளும்போது அதில் உள்ள Bisphenol A என்ற ரசாயனமும், Phthalates என்கிற ரசாயனமும் உடலுக்குள் செல்கிறது.இதனால் ஹார்மோன் மாற்றங்கள், உடல்பருமன், சிறுவயதிலேயே பருவம் அடைதல், ஆண்மைக் குறைவு, இதய நோய், புற்றுநோய், குழந்தையின்மை, கருச்சிதைவு, நீரிழிவு, கல்லீரல் பாதிப்பு, நரம்பு தொடர்பான பிரச்னைகள் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.

அதுபோல சூடான உணவுப் பொருள் பிளாஸ்டிக் மீது படுவதால் பாதிப்பு உடனடியாகவும், அதிகளவும் உடல் நலம் பாதிக்கும். குளி்ர்ந்த உணவு, தண்ணீர் போன்றவை பிளாஸ்டிக் கொண்டு பயன்படுத்தும் இதனுடைய பாதிப்புகள் மெதுவாகவும், குறைந்த அளவும் இருக்கும். அதனால் பிளாஸ்டிக் பயன்பாட்டை குளிர்ந்த நிலையிலும் பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.  காகிதம், துணி, பாக்கு மட்டை, வாழை இலை, சணல் பைகள் கண்ணாடி பாத்திரங்கள் போன்றவற்றை பிளாஸ்டிக் மாற்றாக அவசியம் பயன்படுத்த வேண்டும். தேநீர் கடைகளில் குவளைகள், பாக்குமட்டைகளை செய்யப்பட்ட
பொருட்களைப் பயன்படுத்தலாம்.

பிளாஸ்டிக் பொருட்களை கண்ட இடங்களில் கொட்டுவதை தவிர்க்க வேண்டும். முக்கியமாக, எக்காரணம் கொண்டும் பிளாஸ்டிக் பொருட்களை எரிக்கக் கூடாது. இதனால் தீவிர நுரையீரல் பிரச்னைகள் சுவாசக் கோளாறுகள், பார்வை கோளாறுகள் வரலாம். தண்ணீர் பாட்டில், உணவு உண்ணும் பாத்திரங்கள் போன்றவை பிளாஸ்டிக்காக இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு புட்டிப்பால் பிளாஸ்டிக் அல்லது ரப்பர் நிப்பிளோ கொடுப்பதைத் தவிருங்கள். குழந்தைகளின் ஃபீடிங் பாட்டிலில் மிக மோசமான பிளாஸ்டிக் பாதிப்புகள் இருக்கிறது.

மைக்ரோவேவ் அவனில் பயன்படுத்தப்படுவது உயர்தரமான பிளாஸ்டிக் என்றாலும் அதனால் பாதிப்புகள் வருவது உறுதி. ஹோட்டலில் உணவு உண்டாலும், பார்சல் வாங்கினாலும் வாழையிலையில் வாங்குவது நல்லது. இளநீர், பழச்சாறு குடிக்கும்போதும் ஸ்ட்ராவைக் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். பிளாஸ்டிக் ஃபர்னிச்சர், மின்சார உபகரணங்கள், குழந்தைகள் விளையாடும் பொம்மைகள், மருத்துவத்துக்குப் பயன்படும் பிளாஸ்டிக் பயன்பாடுகள் போன்றவைகளுக்கு முறையான மாற்று கண்டறிவது. நொறுக்குத்தீனிகள், குளிர்பானங்கள், பிஸ்கட் போன்ற உணவுப் பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்கள் அதிகம் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துகின்றனர். இதையும் அரசு கவனத்தில் எடுத்துக்கொண்டு கட்டுப்படுத்த வேண்டும்.

Tags :
× RELATED மழை காரணமாக திருச்சி சாலையில் மரம்...