சர்வதேச ஆராய்ச்சியாளர்களின் கவனத்தை ஈர்க்கும் 316 ஏக்கர் பிரமாண்ட வடுவூர் ஏரி

* 38 வகையான 2 லட்சம் பறவைகள்

* நீர்நாய்கள் பார்க்கலாம்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் இருந்து தஞ்சாவூர் செல்லும் மாநில நெடுஞ்சாலையில் உள்ள வடுவூரில் 316 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமாக வடுவூர் ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியில் ஒவ்வொரு வருடமும் மேட்டூர் அணையிலிருந்து சாகுபடிக்கென திறந்து விடப்படும் தண்ணீர் சேமிக்கப்பட்டு சுற்றியுள்ள கிராமங்களின் விவசாயத்திற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

வடகிழக்கு பருவமழையின் போது இயல்பாக பெறப்படும் மழைநீரும் இந்த ஏரியில் சேரும். வடுவூர் ஏரியை சுற்றி வளமான ஈர நிலங்கள் அதிக அளவில் இருப்பதால் எந்த நேரமும் இங்கு ரம்யமான சூழல் நிலவும். இதனால், ஆண்டுதோறும் செப்டம்பர் மாதத்தில் இருந்து மத்திய ஆசியா மற்றும் ஐரோப்பா போன்ற மேலை நாடுகளில் இருந்தும் இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் இருந்தும் இனப்பெருக்கத்திற்காக வரும் 38 வகையான 2 லட்சம் பறவைகளை இந்த ஏரி வெகுவாக ஈர்க்கிறது. பறவைகளுக்கு தேவையான பல்வேறு உணவு வகைகளை இந்த ஏரி பூர்த்தி செய்கிறது.

இனப்பெருக்கத்திற்காக வரும் பறவைகள் இங்கு முட்டையிட்டு குஞ்சு பொறித்து பின்னர் ஏப்ரல் மாதம் முதல் தங்களின் நாடுகளுக்கு மீண்டும் பறந்து செல்கிறது. இதன் காரணமாக தமிழக வனத்துறை சார்பில் கடந்த 1999ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் வடுவூர் ஏரியில் பாதுகாக்கப்பட பறவைகள் சரணாலயம் செயல்பட்டு வருகிறது. சீசன் காலங்களில் இந்த ஏரியில் தங்கியுள்ள பறவைகளை ரசிப்பதற்காக டெல்டா உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து தினம்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவதுண்டு.

பாலூட்டி விலங்கு வகையை சேர்ந்த அழிந்து வரும் உயிரினமும், உயிர்ச்சூழல் மண்டலத்தில் முக்கிய பங்கு வகிக்கும் நீர் நாய்கள் வடுவூர் ஏரிக்கு மேலும் அழகு சேர்த்து சுற்றுலா பயணிகளை வெகுவாக ஈர்க்கிறது. இயற்கையின் மீது தீராத தாகம் கொண்ட ஆராய்ச்சியாளர்கள், ஆய்வாளர்கள் மற்றும் வன உயிரியல் கல்வி பயிலும் ஆராய்ச்சி மாணவர்கள் இங்கு வந்து பல்வேறு ஆய்வு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து, மாவட்ட வனஅலுவலர் டாக்டர் அறிவொளி கூறுகையில், சரணாலயத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் வன சூழல் மேம்பாட்டு குழு சார்பில் சூழல் அங்காடி அமைக்கப்பட்டுள்ளது.

ஏரிக்கரைகளில் சைக்கிளில் சென்று ஏரி மற்றும் பறவைகளின் அழகை ரசிப்பதற்கு சிறப்பு திட்டம் செயல் படுத்தப்பட்டுள்ளது. இந்த பாதுகாக்கப்பட்ட பறவைகள் சரணாலயம் கடந்த சில தினங்களுக்கு முன்பு ராம்சர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. இதன்முலம் சர்வதேச அளவில் செயல்படும் ஆராய்ச்சியாளர்களின் கவனம் வடுவூர் பக்கம் திரும்பி உள்ளது. இந்த சரணாலயத்தில் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக பாதுகாப்பான காட்சிக்கோபுரங்கள் அமைக்கப்பட்டிருக்கிறது. வரும் காலங்களில் தொலை நோக்கிகள் மூலம் பல வகையான பறவைகளை கண்டு ரசிக்கவும், இயற்கை மற்றும் பறவைகளை பார்த்து ரசிப்பதற்காக படகுச்சவாரி வசதிகளும் வனத்துறை சார்பில் செய்து தரப்படும் என்றார்.

வனச்சரக அலுவலரும், உயிரியல் ஆர்வலருமான ஜெயச்சந்திரன் கூறுகையில், இந்த பறவைகள் சரணாலயத்தில் பாதுகாப்பான சூழல் நிலவுவதாலும், வெவ்வேறு உணவு பழக்கங்களை கொண்ட பல்வேறு பறவைகளுக்கு தேவையான உணவுகள் இங்கு எளிதாக கிடைப்பதாலும், இதன் முக்கியத்துவம் உணர்ந்து கிராம மக்கள் தொடர்ந்து அளித்து வரும் ஒத்துழைப்பு காரணமாகவும் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து வருகிற பறவைகளின் எண்ணிக்கையும் ஆண்டு தோறும் அதிகரித்து வருகிறது. வன உயிரியல் குறித்து உயர்கல்வி கற்கும் மாணவர்களின் தேவைகளையும் இந்த சரணாலயம் பூர்த்தி செய்கிறது என்றார்.

பறவைகள் சரணாலயத்தில் பாதுகாப்பான சூழல் நிலவுவதாலும், வெவ்வேறு உணவு பழக்கங்களை கொண்ட பல்வேறு பறவைகளுக்கு தேவையான உணவுகள் இங்கு எளிதாக கிடைப்பதாலும், இதன் முக்கியத்துவம் உணர்ந்து கிராம மக்கள் தொடர்ந்து அளித்து வரும் ஒத்துழைப்பு காரணமாகவும் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து வருகிற பறவைகளின் எண்ணிக்கையும் ஆண்டு தோறும் அதிகரித்து வருகிறது.

Related Stories: