மும்பை பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு ஒத்திவைப்பு: மாணவர்கள் கோரிக்கையை ஏற்று நடவடிக்கை

மும்பை: மும்பை பல்கலைக்கழகத்தின் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களின் கோாிக்கையை ஏற்று 5வது செமஸ்டர் தேர்வுகளை ஒத்திவைத்துள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது. மும்பை பல்கலைக்கழகத்தின் செமஸ்டர் தேர்வுகள் இந்த மாதம் 15ம் தேதி நடத்தப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு இறுதியாண்டு படிக்கும் மாணவர்கள் கோரிக்கை கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தனர். அதில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த 2 ஆண்டுகளாக ஆன்லைன் தேர்வு எழுதியதால் போதுமான எழுத்துப்பயிற்சி தேவைப்படுகிறது.

எனவே நேரடி எழுத்து தேர்வுக்கு தயாராக கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் மாணவர்களின் கோரிக்கையை ஏற்று 5வது செமஸ்டர் தேர்வுகளை தீபாவளிக்கு பிறகு நடத்த நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக பல்கலைக்கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது:  பல்கலைக்கழக தேர்வு மற்றும் மதிப்பீட்டு கமிட்டி கூட்டத்தில் 5வது செமஸ்டர் தேர்வை தீபாவளிக்கு பிறகு நடத்திக்கொள்ள முடிவு செய்துள்ளோம். எனவே தீபாவளிக்கு பிறகு புதிய செமஸ்டர் தேர்வுக்கான தேதி அறிவிக்கப்படும். புதிய தேர்வு தேதி அறிவிக்கப்படுவதை mu.ac.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories: