சிவசேனா துவக்கியதில் இருந்து முதல் முறையாக 2 இடங்களில் இன்று தசரா பேரணி: முதல்வர் ஷிண்டே, உத்தவ் தனித்தனியாக நடத்துகின்றனர்

மும்பை: சிவசேனா துவக்கியதில் இருந்து முதல் முறையாக முதல்வர் ஷிண்டே அணி, உத்தவ் தாக்கரே அணி என இரண்டு பிரிவாக பிளவு பட்டதால் 2 இடங்களில் தசரா பேரணி இன்று நடக்கிறது. இருதரப்பினருமே தொண்டர்கள் ஆதரவு தங்களுக்குத்தான் உள்ளது என்பதை காட்டும் வகையில் அதிக கூட்டம் கூட வைக்க தீவிரம் காட்டி வருகின்றனர். இதனால் இரு தரப்புக்கும் விசுவாசிகள் யார் பக்கம் என்று காட்டுவதில் போட்டா போட்டி ஏற்பட்டுள்ளது. இந்த பேரணியை முன்னிட்டு வரலாறு காணாத போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. போலீஸ் அதிகாரிகள், மாநில ரிசர்வ் படை, ஹோம்கார்டு உட்பட 20,000க்கும் மேற்பட்ட போலீசாரும், 10 அதிரடிப் படையினர், 15 வெடிகுண்டு கண்டறியும் குழுவினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

 சிவசேனா கட்சியை பாலாசாகேப் தாக்கரே 1966ம் ஆண்டு ஜூன் 16ம் தேதி துவக்கினார். 4 மாதங்களுக்கு பிறகு, அக்டோபர் 30ம் தேதி தசரா பேரணியை சிவாஜி பார்க்கில் நடத்தி, அதில் உரையாற்றினார். அப்போது முதல் ஒவ்வொரு ஆண்டும் தசரா அன்று சிவாஜி பார்க்கில் சிவசேனா பேரணி நடைபெற்று வந்தது. உத்தவ் தாக்கரே சிவசேனா தலைவரான பிறகும் இந்த மரபு தொடர்ந்தது. கொரோனா பரவல் ஊரடங்கிற்கு பிறகு 2 ஆண்டு பேரணி நடக்கவில்லை. கடந்த ஆண்டு சயானில் உள்ள சண்முகானந்தா ஹாலில் நடந்தது. தற்போது, சிவசேனாவில் இருந்து அதிருப்தி எம்எல்ஏக்கள் 40 பேருடன் பிரிந்து சென்ற ஏக்நாத் ஷிண்டே, பாஜவுடன் கூட்டணி அமைத்து முதல்வராகியுள்ளார்.

இதன்பிறகு சிவசேனா, ஷிண்டே அணி, உத்தவ் தாக்கரே அணி என இரண்டு அணிகளாக பிளவுபட்டு நிற்கிறது. இரு தரப்பினருமே தாங்கள்தான் உண்மையான சிவசேனா என கூறி வருகின்றனர். இதையடுத்து, சிவாஜி பார்க்கில் தசரா பேரணி நடத்த இரண்டு அணிகளும் விண்ணப்பித்திருந்தன. ஆனால், காவல்துறை பரிந்துரைப்படி சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி இரண்டு அணிகளுக்கும் மாநகராட்சி அனுமதி மறுத்து விட்டது. முன்னதாகவே, ஷிண்டே தரப்பினர் பாந்த்ரா குர்லா காம்ப்ளக்சில் எம்எம்ஆர்டிஏ மைதானத்தில் பேரணி நடத்த அனுமதி வாங்கி விட்டனர். இதனால், சிவாஜி பார்க்கில் எப்படியும் அனுமதி பெற்றே தீருவது என்ற முயற்சியுடன், மும்பை நீதிமன்றத்தை உத்தவ் தரப்பினர் நாடினர்.

சட்டப்போராட்டத்தில் உத்தவ் அணி சிவாஜி பார்க்கில் தசரா பேரணி நடத்த அனுமதி கிடைத்தது. இது அந்த அணிக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாகவும் கருதப்படுகிறது. அதேநேரத்தில், பேரணியில் திரளானோர் கலந்து கொள்ளச் செய்ய வேண்டும் என்பதில் 2 அணிகளுமே தீவிரமாக இருக்கின்றன. ஷிண்டே அணியின் செய்தித்தொடர்பாளர் ஷீதல் மாத்ரே, ‘பேரணிக்காக எம்பி மற்றும் எம்எல்ஏக்கள் 4,000 முதல் 5,000 பஸ்களை முன்பதிவு செய்துள்ளனர். அவர்கள் தங்கள் ஆதரவாளர்களுடன் பேரணியில் கலந்து கொள்வார்கள்’ என்று தெரிவித்தார். இதுபோன்றே உத்தவ் தரப்பினரும், தங்கள் அணி சார்பில் சிவாஜி பார்க்கில் நடத்தப்படும் பேரணியில் அதிக கூட்டம் கூட வேண்டும் என்பதில் முனைப்பு காட்டி வருகின்றனர்.

இரண்டு அணிகளாக பிளவு பட்டு நிற்பதால், சிவசேனா கட்சி துவக்கப்பட்ட பிறகு முதல் முறையாக தசரா பேரணி 2 இடங்களில் நடக்கிறது. எதிரெதிர் துருவங்களாக பிரிந்துள்ள ஒரே கட்சியின் இரண்டு அணிகள் தங்கள் பலத்தை நிரூபிக்கும் வகையில் நடத்தப்படுவதாலும், இதில் இரு தரப்புக்கும் கடும் போட்டா போட்டி நிலவுவதாலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. இதுகுறித்து மும்பை மூத்த போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘பாதுகாப்பு பணியில் 3,200 போலீஸ் அதிகாரிகள், 1,500 மாநில ரிசர்வ் போலீஸ் படையினர், ஹோம் கார்டை சேர்ந்த 1000 பேர், 20 அதி விரைவு படையினர், 15 வெடிகுண்டு கண்டறியும் நிபுணர் குழுக்கள் ஈடுபடுத்தப்படுகின்றன.

இது தவிர குற்றப்பிரிவு போலீசார் சாதாரண உடைகளில் கண்காணிப்பு பணி செய்வார்கள். பாந்த்ரா குர்லாவில் மட்டும் 2,000 போலீசார், 6 துணை கமிஷனர்கள், 16 உதவி கமிஷனர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஜூகு, வர்சோவா,தாதர், கிர்காவ் ஆகிய இடங்களில்  தீவிர காண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. வாகனங்களை பார்க்கிங் செய்ய சிறப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன’’ என்றார். பேரணி நடக்கும் இடங்களிலும், பேரணிக்கு தொண்டர்கள், மக்கள் வரும் வழிகளிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மோதல் சூழ்நிலை ஏற்பட்டு விடாமல் தடுக்க கண்காணிப்புகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

யுவசேனா துவக்கியது உட்பட சிவசேனா கட்சிக்கு தசரா பேரணி ஒவ்வொரு மறைமுக்கியத்துவம் வாய்ந்த மைல் கல்லாக இருந்துள்ளது. பல்வேறு முக்கிய முடிவுகள், திருப்பங்கள் தசரா பேரணியிலும், அதன் பிறகும் நிகழ்ந்திருக்கின்றன. எனவே, இந்த பேரணி மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக கருதப்படுகிறது.

Related Stories: