கோவாவில் இருந்து மகாராஷ்டிராவுக்குள் ஒரு பாட்டில் மது கடத்தினாலும் மோக்கா சட்ட நடவடிக்கை பாயும்: அமைச்சர் சாம்புராஜ் தேசாய் எச்சரிக்கை

மும்பை: கோவாவில் இருந்து மகாராஷ்டிராவுக்குள் மது கடத்தி வந்தால் மோக்கா சட்டம் பாயும் என்று மாநில கலால் துறை அமைச்சர் சாம்புராஜ் தேசாய் தெரிவித்தார். ஒரு பாட்டில் மது கோவாவில் இருந்து கொண்டு வந்தால் கூட அவர்கள் மீது மோக்கா சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார். கோவாவில் இருந்து மகாராஷ்டிராவுக்குள் மதுபானம் கடத்தி வருபவர்களுக்கு எதிராக மாநில கலாத்துறை அதிகாரிகளும் போலீசாரும் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இருந்த போதிலும் கோவாவில் இருந்து பெருமளவில் மது கடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில்தான் கோவாவில் இருந்து ஒரு பாட்டில் மது கொண்டு வந்தால் கூட அவர்கள் மீது கடுமையான மோக்கா சட்டத்தின் கீழ் நடவடிக்கு எடுக்கப்படும் என்று அமைச்சர் எச்சரித்துள்ளார். மகாராஷ்டிராவில் உள்ள கோலாப்பூர் மற்றும் சிந்துதுர்க் மாவட்டங்கள் கோவா மாநிலத்தின் எல்லையில் உள்ளன. இந்த இரு மாவட்டங்கள் வழியாகத்தான் கோவாவில் இருந்து மகாராஷ்டிராவுக்குள் மதுபானம் கடத்தி வரப்படுகிறது. எனவே கோவாவில் இருந்து மது கடத்தி வருபவர்களை கைது செய்து போலீசாரிடம் ஒப்படைக்குமாறு இந்த இரு மாவட்டங்களின் அதிகாரிகளுக்கும் தான் உத்தரவிட்டுள்ளதாகவும் அமைச்சர் தேசாய் தெரிவித்தார்.

போலீசார் மது கடத்தியவர்கள் மீது மோக்கா சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் தேசாய் கூறினார். மது கடத்துபவர்களை பிடிக்க சிந்துதுர்க்கில் தற்காலிக சோதனை சாவடிகளை அமைக்குமாறும் அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். மோக்கா சட்டம் என்பது கடுமையான சட்டம் ஆகும். திட்டமிட்டு கடுமையான குற்றச்செயல்களில் ஈடுபடுபடுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்காகவே இந்த சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால் மது கடத்துபவர்களுக்கு எதிராக இந்த சட்டம் பயன்படுத்தப்படும் என்று அமைச்சர் கூறியிருப்பது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

காங்கிரஸ் கடும் கண்டனம்

அமைச்சரின் அறிவிப்புக்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இது பற்றி மாநில காங்கிரஸ் கமிட்டியின் பொது செயலாளர் சச்சின் சாவந்த் கூறியதாவது:  மோக்கா சட்டம் என்றால் என்ன என்று அமைச்சர் தேசாய்க்கு தெரியுமா?  கோவாவில் இருந்து மகாராஷ்டிராவுக்குள் வரும் சுற்றுலா பயணிகளுக்கு எதிராகவும் மோக்கா சட்டம் பயன்படுத்தப்படுமா?

திட்டமிட்டு கடும் குற்றச்செயல்களில் ஈடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கத்தான் மோக்கா சட்டம் சட்டம் கொண்டு வரப்பட்டது.  மதுபானம் கடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேறு சட்டங்களே இல்லையா? ஏக்நாத் ஷிண்ட்-பட்நவிஸ் அரசு மகாராஷ்டிராவில் உ.பி மாநிலத்தில் உள்ளது மாதிரி ஆட்சியை கொண்டு வர திட்டமிட்டுள்ளனரா? இவ்வாறு சச்சின் சாவந்த் கேள்வி மேல் கேள்வி எழுப்பினார்.

Related Stories: