×

குவியும் தசரா குழுக்களால் திணறும் குலசேகரன்பட்டினம்

உடன்குடி: மைசூருக்கு அடுத்தப்படியாக தசரா திருவிழாவுக்கு பிரசித்தி பெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் இந்தாண்டுக்கான திருவிழா, கடந்த 26ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் பல்வேறு திருக்கோலங்களில் அம்மன் வீதியுலா நடந்து வருகிறது. 7வது திருநாளன்று காலை 8 மணி முதல் மாலை 6.30 மணி வரை சிறப்பு அபிஷேக ஆராதனைகள், மாலை 4.30 மணிக்கு மகிஷாசூரன் வீதியுலா, மாலை 4 மற்றும் 5 மணிக்கு சமயசொற்பொழிவு, மாலை 6 மணி பரதநாட்டியம், இரவு 8 மணி கலைநிகழ்ச்சி, இரவு 10 மணி பூஞ்சப்பரத்தில் ஆனந்த நடராஜர் திருக்கோலத்தில் அம்மன் வீதியுலா நடைபெற்றது. இத்திருக்கோலத்தில் அம்மனை தரிசித்தால்  வீடுபேறு கிடைக்கும் என்பது ஐதீகம். இதில் பக்தர்கள் திரளானோர் கலந்து  கொண்டனர்.

சிகர நிகழ்ச்சியான மகிஷா சூரசம்ஹாரம், நாளை (5ம் தேதி) நள்ளிரவு சிதம்பரேஸ்வரர் கடற்கரையில் நடக்கிறது. தசரா திருவிழாவை முன்னிட்டு நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான தசரா குழுவினர் குழுக்களாக குலசேகரன்பட்டினம் வரத்துவங்கி உள்ளனர். அவர்கள், சிதம்பரேஸ்வரர் கடலில் நீராடி புனித நீர் எடுத்து மேளதாளத்துடன் கோயிலுக்கு வந்து அம்மன் பாதத்தில் பூஜை நடத்தி வேடம் அணிந்து வருகின்றனர்.

வேடம் அணியும் தசரா குழுவினர் வீதி, வீதியாக காணிக்கை வசூலித்து அம்மன் சன்னதியில் படைப்பர். வழக்கமாக 6, 7ம் திருவிழாவில் இருந்து ஏராளமான தசரா குழுவினர் சாரை, சாரையாக வந்து கோயிலில் திருக்காப்பு அணிந்து வேடங்கள் அணிவது வழக்கம். இதேபோல் இந்தாண்டும் குலசேகரன்பட்டினத்தில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.


Tags : Kulasekaranpatnam , Dussehra Group, Kulasekaranpatnam`
× RELATED திமுகவின் விடாமுயற்சியால் ராக்கெட் ஏவுதளம்: கனிமொழி