×

கனல் தெறிக்கும் பேச்சால் வெள்ளையர்களை கதிகலங்க வைத்த சுப்பிரமணிய சிவாவிற்கு மணிமண்டபம் கட்டப்படுமா?.. வத்தலக்குண்டு மக்கள் நீண்டகாலமாக எதிர்பார்ப்பு

வத்தலக்குண்டு: வத்தலக்குண்டுவில் பிறந்தவர் சுதந்திர போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவா. சிவம் பேசினால் சவமும் எழும் என்று போற்றப்பட்டவர். மகாகவி பாரதியாரையும், சுப்பிரமணிய சிவாவையும் சுதந்திர போராட்ட களத்தில் இரட்டைக்குழல் துப்பாக்கி என்பர். மகாகவி பாரதி பாடல்களாலும் கப்பலோட்டிய தமிழன் வஉசி போராட்டங்களாலும் வத்தலக்குண்டு சுப்பிரமணிய சிவா கனல் தெறிக்கும் பேச்சாலும் சுதந்திர போராட்ட களத்தில் போராடினர்.

இவர்கள் மூன்று பேரையும் சுதந்திர போராட்ட களத்தில் போராடிய சூலாயுதத்தின் மூன்று முனைகள் என்பர். இதில் பாரதியாருக்கு அவர் பிறந்த ஊரான எட்டயபுரத்தில் நினைவு மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது. அதேபோல வஉசிக்கு தூத்துக்குடி அருகே ஒட்டப்பிடாரத்தில் நினைவு மணிமண்டபம் கட்டப்பட்டுவிட்டது. சுப்பிரமணிய சிவா மறைந்து இன்னும் இரண்டு ஆண்டுகளில் ஒரு நூற்றாண்டு முடிய போகிறது. ஆனால் இதுவரை மணிமண்டபம் கட்டப்படவில்லை.

உடலில் தொழுநோய் வந்த போதிலும் ஊர் ஊராக சென்று பிரசங்கம் செய்தவர் சிவா. ஆங்கிலேய அரசு ரயிலில் செல்ல தடை விதித்த போதிலும் உடலில் சாக்கை போர்த்திக்கொண்டு மூட்டைகளோடு மூட்டைகளாக ரயிலில் சென்று பல்வேறு ஊர்களில் பிரசங்கம் செய்தார். யாவரும் ஒரே ஜாதி, பாரத ஜாதி யாவரும் ஒரே மதம், பாரத மதம் யாவருக்கும் ஒரே தெய்வம் பாரத மாதா என்று முழங்கிய சுப்பிரமணிய சிவாவுக்கு வத்தலக்குண்டுவில் மணிமண்டபம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக நிலவி வருகிறது.

சுதந்திர போராளியாக மட்டுமல்லாமல் ஞானபானு, பிரபஞ்சமித்திரன் இதழ்கள் நடத்தி சமுதாய சீர்திருத்த போராளியாகவும் விளங்கிய சுப்பிரமணிய சிவாவுக்கு புகழ்சேர்க்கும் வகையில் வத்தலக்குண்டு பஸ் நிலையத்துக்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது. வத்தலக்குண்டு சிறப்பு நிலை பேரூராட்சியில் கூட்ட அரங்கில் சிவாவின் உருவப்படம் வரையப்பட்டுள்ளது. அவர் ஆற்றிய அரும்பணிக்கு இதுவெல்லாம் போதாது. கொடைக்கானல் செல்லும் பயணிகள் பார்த்து செல்லும் வகையில் சிவா நினைவு மணிமண்டபம் வத்தலக்குண்டுவில் அமைக்க வேண்டும். அவரது நூற்றாண்டு விழா வருவதற்குள் இதனை கட்ட வேண்டும் என்பதே வத்தலக்குண்டு பொதுமக்களின் ஒருமித்த கருத்தாக உள்ளது.

இது குறித்து சுப்பிரமணிய சிவா நற்பணி நல சங்க செயலாளர் ஜெர்மன் ராஜா கூறுகையில், 40 ஆண்டுகள் வாழ்ந்த சுப்ரமணிய சிவா 400 ஆண்டுகள் வாழ்ந்ததற்கான சேவைகளை செய்துள்ளார். அவருக்கு அரசு இடம் மட்டும் ஒதுக்கி தந்தால் போதும். மண் சுமந்து கட்டிடம் கட்ட சிவா ஆர்வலர்கள் நூற்றுக்கணக்கில் காத்திருக்கிறோம் என்றார்.

Tags : Subramanian Siva ,Vathalakundu , People of Subramanya Shiva, Manimandapam, Vathalakundu,
× RELATED வத்தலக்குண்டுவில் சாலையை மேம்படுத்தும் பணி துவங்கியது