திண்டுக்கல்லில் 6ம் தேதி புத்தக திருவிழா 16ம் தேதி வரை நடக்கிறது: கலெக்டர் விசாகன் தகவல்

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் அக்.6ம் தேதி முதல் அக்.16ம் தேதி வரை புத்தகத் திருவிழா நடைபெற உள்ளது. என கலெக்டர் விசாகன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கலெக்டர் விசாகன் தெரிவித்ததாவது:

திண்டுக்கல் ட்டலி மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் திண்டுக்கல் இலக்கிய களம் இணைந்து நடத்தும் புத்தகத்திருவிழா அக்.6 முதல் அக்.16ம் தேதி வரை தினசரி காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறவுள்ளது. புத்தகத் திருவிழா நடைபெறும் அக்.6ம் தேதி காலை 7 மணியளவில் திண்டுக்கல் நகரின் 8 முனைகளிலிருந்து 400க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் பங்கேற்கும் அறிவுச்சுடர் மெல்லோட்டம் நடைபெறவுள்ளது.

காலை 11 மணி முதல் 12 மணி வரை அனைத்து கல்லூரிகளிலும், மாணவர்கள், பேராசிரியர்களும், பிற்பகல் 1.30 மணி முதல் 2.30 வரை அனைத்து அரசு அலுவலகங்களிலும் அரசு அலுவலர்கள் பங்கேற்கும் திண்டுக்கல் வாசிக்கிறது என்னும் இயக்கம் மாவட்டம் முழுவதும் நடைபெறுகிறது. மாலை 4.30 மணியளவில் சங்கரதாஸ் சுவாமிகள் சிலை அருகிலிருந்து புத்தகத்திருவிழா மைதானம் வரை கலைஞர்கள், எழுத்தாளர்கள் பங்கேற்கும் கலை பேரணி நடைபெற உள்ளது.

திண்டுக்கல் ட்டலி மேனிலைப்பள்ளி மைதானத்தில் மாலை 6 மணிக்கு சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை நீதிபதி மதி புத்தகத் திருவிழாவைத் தொடங்கி வைக்கிறார். அக்.16ம் தேதி அன்று நடைபெறும் நிறைவு விழாவில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி கேடயங்கள் வழங்கி விழா பேருரை ஆற்றுகின்றனர்.

இப்புத்தக திருவிழாவில் 125 அரங்குகள் அமைக்கப்படுகிறது. புத்தக பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கு 110 அரங்குகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வரங்குகளில் பல்வேறு மொழிகளில், பல்லாயிரம் தலைப்புகளில் புத்தகங்கள் காட்சி மற்றும் விற்பனைக்கு வைக்கப்படவுள்ளது. அரசு துறைகளுக்கு 10 அரங்குகளும், மாணவர்களுக்கு பயனளிக்கும் வகையில் கோலரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. அக்.9ம் தேதி புத்தகம் வங்குவதற்கென தொகை சேமிக்கும் வகையில் 25,000 பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு உண்டியல் வழங்கப்பட்டுள்ளது.

புத்தகத்திருவிழாவில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பங்குபெறும் கலை நிகழ்ச்சிகள் தினசரி நடைபெறும். கலை பண்பாட்டுத்துறையின் சார்பில் பல்சுவை கலைநிகழ்ச்சிகள் நடைபெறும்.  பல்வேறு சிறந்த ஆளுமைகள் தினமும் வருகை தந்து சிறப்பான கருத்துரைகள் வழங்க உள்ளனர். நல்லாசிரியர்கள் விருது பெற்றவர்கள், 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புகளில் 100 சதவீதம் தேர்ச்சி வழங்கிய பள்ளி தலைமையாசிரியர்கள், கடந்த ஆண்டைவிட 50 சதவீதம் கூடுதலாக ஆரம்ப பள்ளியில் மாணவர்களை சேர்த்த தலைமையாசிரியர்களுக்கு பாராட்டு, பரிசுகளும் வழங்கப்படவுள்ளது.

திண்டுக்கல் புத்தகத் திருவிழாவில் ரூ.25,000 மற்றும் ரூ.30,000க்கும் மேல் உண்டியல் சேர்த்த பள்ளிகளுக்கும், புத்தகங்கள் வாங்கிய நிறுவனங்களுக்கும் அமைச்சர்கள் கேடயங்கள் வழங்க உள்ளார்கள். சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், சுகாதார வளாகம் மற்றும் முதல் உதவி மையம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இப்புத்தக திருவிழாவிற்கு வரும் அனைவருக்கும் நுழைவு கட்டணம், வாகனம் நிறுத்துமிட கட்டணம் ஏதுமில்லை. எனவே, திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள், மாணவ, மாணவியர்கள் அனைவரும் புத்தகத்திருவிழாவிற்கு வருகை தந்து சிறப்பிக்குமாறு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது என கலெக்டர் தெரிவித்தார்.

கூடுதல் ஆட்சியர் தினேஷ்குமார், டி.ஆர்.ஓ லதா, மாவட்ட வன அலுவலர் பிரபு, கலெக்டரின் நேர்முக உதவியாளர் அமர்நாத், மாவட்ட நூலக அலுவலர் சரவணக்குமார், தமிழ் இலக்கிய கள தலைவர் மனோகரன், நிர்வாக செயலாளர் கண்ணன், பொருளாளர் மணிவண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: