கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து அறிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக்கொள்வதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் சிலுவைப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சார்லஸ் (வயது 58). இவர் அதே கிராமத்தை சேர்ந்த பிரதீவ் ராஜ் (36), பிரவீன் ராஜ் (19), தாவீது (30), ஈசாக் (39), தெர்மஸ் (19) உள்பட 10-க்கும் மேற்பட்டோர் தஞ்சை மாவட்டம் பூண்டி மாதா பேராலயத்தில் பிரார்த்தனை செய்வதற்காக நேற்று முன்தினம் மாலை வந்தனர்.

பின்னர், மாதாவை தரிசனம் செய்த அவர்கள் இரவில் அங்கேயே தங்கினர். இந்த நிலையில் நேற்று காலை சார்லஸ், பிரதீவ்ராஜ், பிரவீன்ராஜ் உள்பட 6 பேர் மாதா கோவில் அருகே உள்ள கொள்ளிடம் ஆற்றில் இறங்கி குளித்தனர். திடீரென தண்ணீரின் வேகம் அதிகரித்ததால் அவர்கள் 6 பேரும் ஆற்றில் தத்தளித்து பின்னர் சிறிது நேரத்தில் அடித்து செல்லப்பட்டனர். இது குறித்து தகவல் அறிந்த திருக்காட்டுபள்ளி தீயணைப்பு துறையினர், போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

இதையடுத்து தீயணைப்பு துறையினர் ஆற்றில் குதித்து 6 பேரையும் தேடினர். இதில் சார்லஸ், பிரதீவ்ராஜ் ஆகிய 2 பேர் உடலை சடலமாக மீட்டனர். தொடர்ந்து அவர்களது உடல்களை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் 4 பேரில் இரண்டு பேர் சடலமாக மீட்கப்பட்டனர். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 4ஆக உயர்ந்தது. 4 பேர் சடலமாக மீட்கப்பட்ட நிலையில் மேலும் இருவர் சடலமாக மீட்கப்பட்டனர்.

நிவாரணம் தொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:

நேற்று (3.10.2022) காலை சுமார் 9 மணியளவில், ஆன்மீக சுற்றுலாவிற்காக தஞ்சாவூர் மாவட்டத்திற்கு வந்திருந்த தூத்துக்குடி மாவட்டம். மாப்பிள்ளையூரணி கிராமம், சிலுவைப்பட்டியைச் சேர்ந்த திரு.சார்லஸ் (வயது 38), திரு.பிருத்விராஜ் (வயது 36), திரு.தாவீதுராஜா (வயது 30), திரு.பிரவீன்ராஜ் (வயது 19), திரு.ஈசாக் (வயது 19) மற்றும் செல்வன். அண்டோ கெரிமஸ் ரவி ஆகிய ஆறுபேரும் கொள்ளிடம் ஆற்றில் குளிக்கச் சென்றபோது பள்ளத்தில் விழுந்ததில் நீச்சல் தெரியாமல் நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும். ஆறுதல்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: