உபியில் சோகம் துர்கா பூஜை பந்தலில் தீப்பிடித்து 5 பேர் பலி: ஏற்பாட்டாளர்கள் கைது

பதோஹி: உத்தரப்பிரதேசத்தில் துர்கா பூஜை பந்தலில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 சிறுவர்கள் உட்பட 5 பேர் பலியானார்கள். மேலும் 64 பேர் காயமடைந்தனர். உத்தரப்பிரதேசத்தின் பதோஹியில் துர்கா பூஜை பந்தல் அமைக்கப்பட்டு இருந்தது. இங்கு நேற்று முன்தினம் இரவு நடந்த பூஜையில் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு துர்கை அம்மனை வழிபாடு செய்தனர். விழாவையோட்டி டிஜிட்டல் விளக்குகள் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அப்போது திடீரென பந்தலில் தீப்பற்றியது. இதனால் அங்கிருந்த பொதுமக்கள் அலறி கூச்சலிட்டபடி வெளியே ஓடினார்கள். தகவல் அறிந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் அங்க விரைந்தனர். அதற்குள்ளாக பந்தலில் பற்றிய தீ மளமளவென பரவியது.

பந்தல் எரிந்து விழுந்ததில் 60க்கும் மேற்பட்டோர் பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த தீ விபத்தில் 3 சிறுவர்கள் உட்பட மொத்தம் 5 பேர் உயிரிழந்தனர். முதல் கட்ட விசாரணையில் பந்தலில் பொருத்தப்பட்டு இருந்த பல்புகள் அதிக அளவில் சூடாகி தீப்பற்றியது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, தீ விபத்து தடுப்பு வசதிகள் இன்றி நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த விழா ஏற்பாட்டு குழுவினரை கைது செய்துள்ளனர். தீ விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்களுக்கு சரியான சிகிச்சை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: