×

சினிமாவில் திராவிட இயக்கம் நுழைந்ததால் தமிழகத்தில் மதசார்பின்மை நிலவுகிறது: வெற்றிமாறன் பேச்சு

சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் மக்களவை தொகுதி எம்.பியுமான திருமாவளவனின் 60வது பிறந்தநாள் மணி விழாவையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் இயக்குனர் வெற்றிமாறன் பேசியதாவது: மக்களிடம் இருந்து விலகி இருக்கும் எந்தக் கலையும் முழுமை அடையாது. ஏனென்றால் மக்களுக்காகத்தான் கலை. மக்களை பிரதிபலிப்பதுதான் கலை. இந்தக் கலையை சரியாக இன்றைக்கு நாம் கையாள வேண்டும். இன்றைக்கு நாம் கையாளத் தவறினால் ரொம்ப சீக்கிரத்தில் நிறைய அடையாளங்களை இழக்க நேரிடும். தமிழ் சினிமாவை திராவிட இயக்கங்கள் கையில் எடுத்ததன் விளைவுதான் தமிழ்நாடு இன்னும் ஒரு மதசார்பற்ற நிலையில் இருப்பதற்கு காரணம் என்று கருதுகிறேன். இதேபோன்று வெளி மாநிலங்களில்  இருந்து கலை ரீதியாக எந்த அழுத்தம் கொடுக்கப்பட்டாலும், அதனை எதிர்கொள்ளும் பக்குவத்தோடு தமிழ்நாடு இருக்கிறது.

இதற்கும் திராவிட இயக்கங்கள்தான் காரணம் என்று நினைக்கிறேன். சினிமா என்பது வெகு மக்களை எளிமையாக சென்றடையக் கூடிய கலை வடிவம். சினிமாவை அரசியல் மயமாக்குவது ரொம்ப ரொம்ப முக்கியம். வள்ளுவருக்கு காவி அணிய வைத்து பார்த்ததுபோல், சோழ மன்னரை இந்து அரசனாக காட்டும் முயற்சி நடக்கிறது. சினிமாவிலும் நிறைய அடையாளங்களை பறிக்கிறார்கள். இந்த அடையாளங்களை நாம் காப்பாற்றிக்கொள்ள வேண்டும். விடுதலைக்காக போராட வேண்டும் என்றால் நாம் அரசியல் தெளிவோடு இருக்க வேண்டும். இவ்வாறு வெற்றிமாறன் பேசினார்.

Tags : Tamil Nadu , Secularism prevails in Tamil Nadu as Dravidian movement enters cinema: Vetermaran speech
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...