இளைஞர்களின் நேரத்தை திருட போட்டி நடக்கிறது: விஜய் சேதுபதி பரபரப்பு பேச்சு

சென்னை: இளைஞர்களின் நேரத்தை திருடி, அவர்களை சிந்திக்க விடாமல் செய்யும் வேலைக்கான வியாபார போட்டி நடக்கிறது என விஜய் சேதுபதி கூறினார். சென்னையில் நடைபெற்ற ஒரு கல்லூரி நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி பேசியதாவது: யார் மீது கோபம் வந்தாலும் வெளிக்காட்டாதீர்கள். ஏனென்றால் நேரம் இருக்கிறது. இன்றைக்கு நம்முடன் சண்டை போட்டவனை கல்லூரி முடித்த பின்னர் சந்திக்கும்போது அவன் நமக்கு நண்பனாகிறான். எல்லாவற்றுக்கும் நேரம் கொடுங்கள். உடனே எதிர்வினையாற்ற வேண்டாம். நாம் உடல்ரீதியாக வளர்வதனால் பெரிய ஆள் என நினைக்காதீர்கள். இன்றைக்கு இருக்கும் வியாபார உலகம், உங்களுடைய நேரங்களை திருடுவதற்கு தயாராக இருக்கிறது. உங்கள் நேரத்தை எந்த வகையில் திருடலாம், உங்க மூளைய செயல்படவிடாமல் செய்வது எப்படி என யோசித்துக் கொண்டிருக்கிறார்கள். அதற்கான போட்டி நடக்கிறது.

சமூக வலைதளங்கள் வாயிலாக சண்டை போட வைக்கலாம். அசிங்கமாக பேச வைக்கலாம். அதன் மூலம் உங்களுக்கு சுதந்திரம் கொடுத்த மாதிரி நடிக்கிறார்கள். நம்பி விடாதீர்கள். டெக்னாலஜி உங்களை திண்ண பார்க்கிறது. உங்களை பயன்படுத்தி மார்க்கெட்டிங் செய்து காசு சம்பாதிக்கலாம் என திட்டமிடுகிறார்கள். என்னவெல்லாம் சாப்பிட வைக்கலாம். எதெல்லாம் சாப்பிட்டால் நீங்க நோயாளி ஆவீர்கள். நோயாளி ஆனா, என்ன மருந்து சாப்பிடுவீங்க. எவ்ளோ நாள் நோயாளியா உங்களை கஷ்டப்பட வைக்க முடியும், உங்கள எப்படி ஆட்கொள்ளலாம் என்பதில் இந்த உலகம் ரொம்ப ஆர்வமாக இருக்கிறது. இவ்வாறு விஜய் சேதுபதி பேசினார்.

Related Stories: