டெல் அவிவ்: இஸ்ரேலில் நடந்த டெல் அவிவ் வாட்டர்ஜென் ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் செர்பிய நட்சத்திரம் நோவாக் ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றார். பைனலில் குரோஷியாவின் மரின் சிலிச்சுடம் மோதிய ஜோகோவிச் 6-3, 6-4 என்ற நேர் செட்களில் வென்று கோப்பையை முத்தமிட்டார். ஜூலையில் நடந்த விம்பிள்டன் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்த ஜோகோவிச், அதன் பிறகு களமிறங்கிய இந்த தொடரிலும் ஒரு செட்டில் கூட தோற்காமல் கோப்பையை கைப்பற்றி அசத்தினார். இது அவர் வென்ற 89வது ஏடிபி டூர் வெற்றியாகும். இதன் மூலம் ஜோகோவிச்சுக்கு 250 புள்ளிகள் கிடைத்தாலும் தரவரிசையில் அதே 7 வது இடத்தில் நீடிக்கிறார்.