×

இரானி கோப்பை கிரிக்கெட் 2வது இன்னிங்சில் போராடுகிறது சவுராஷ்டிரா: கேப்டன் உனத்கட் 78*

ராஜ்கோட்: இதர இந்தியா அணியுடனான இரானி கோப்பை கிரிக்கெட் போட்டியில்,  ரஞ்சி சாம்பியன் சவுராஷ்டிரா அணி 2வது இன்னிங்சில் போராடி வருகிறது. ராஜ்கோட், சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நடந்து வரும் இப்போட்டியில், டாஸ் வென்ற இதர இந்தியா முதலில் பந்துவீச... சவுராஷ்டிரா முதல் இன்னிங்சில் 98 ரன்னுக்கு சுருண்டது. அடுத்து முதல் இன்னிங்சை விளையாடிய இதர இந்திய அணி 374 ரன் குவித்து ஆல் அவுட்டானது. கேப்டன் ஹனுமா 82 ரன்,  சர்பராஸ் 138 ரன், சவுரவ் குமார் 55 ரன் விளாசினர். சவுராஷ்டிரா தரப்பில் சேத்தன் சகாரியா 5 விக்கெட் கைப்பற்றினார். 276 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய சவுராஷ்டிரா 2ம் நாள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 49 ரன் எடுத்திருந்தது.

சிராக் ஜனி 3 ரன், தர்மேந்திரசிங் ஜடேஜா 8 ரன்னுடன் நேற்று 3ம் நாள் ஆட்டத்தை தொடங்கினர். ஜனி 6 ரன்னில் வெளியேறினார். முதல் இன்னிங்சில் 4 பந்தில் 1 ரன் எடுத்த புஜாரா, 2வது இன்னிங்சில் 9 பந்தில் 1 ரன்னுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். தர்மேந்திரசிங் 25 ரன்னில் பெவிலியன் திரும்ப, சவுராஷ்டிரா 87 ரன்னுக்கு 5 விக்கெட் இழந்து திணறியது. இந்த நிலையில் ஷெல்டன் ஜாக்சன் - அர்பித் வாசவதா ஜோடி 6வது விக்கெட்டுக்கு 117 ரன் சேர்த்தது. ஜாக்சன் 71 ரன், வாசவதா 55 ரன் எடுத்து முகேஷ் குமார் வேகத்தில் ஆட்டமிழந்தனர்.

215 ரன்னுக்கு 7 விக்கெட் என மீண்டும் சரிவை சந்தித்த அணியை பிரேரக் மன்கட் - கேப்டன் உனத்கட் ஜோடி பொறுபுடன் விளையாடி மீட்டது. பிரேரக் 72 ரன் விளாசி விடைபெற்றார். மூன்றாம் நாள் முடிவில் சவுராஷ்டிரா 2வது இன்னிங்சில் 8 விக்கெட் இழப்புக்கு 368 ரன் குவித்துள்ளது. உனத்கட் 78 ரன், பார்த் பட் 6 ரன்னுடன் களத்தில் உள்ளனர். கை வசம் 2 விக்கெட் இருக்க, சவுராஷ்டிரா 92 ரன் முன்னிலை பெற்றுள்ள நிலையில் இன்று 4ம் நாள் ஆட்டம் நடக்கிறது.

Tags : Saurashtra ,Irani Cup Cricket ,Captain Unathkat , Saurashtra struggle in Irani Cup Cricket 2nd innings: Captain Unathkat 78*
× RELATED பரமக்குடி ஈஸ்வரன் கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம்