கலாசார பாரம்பரிய பட்டியலில் சேர்ப்பு துர்கா பூஜை விழாவுக்கு யுனெஸ்கோ அங்கீகாரம்

புதுடெல்லி: மனித குலத்தின் கலாசார பாரம்பரிய பட்டியலில் துர்கா பூஜையை யுனெஸ்கோ சேர்த்துள்ளது. இதன்மூலம், துர்கா பூஜைக்கு சர்வதேச அளவிலான புதிய அங்கீகாரம் கிடைத்துள்ளது. மனித குல வரலாற்றில் பெண் தெய்வ வழிபாடு மிக முக்கியத்துவம் வாய்ந்தது. போரில் வெற்றி பெறுவதற்கு கொற்றவையை வழிபட்டு, பலி கொடுத்து சென்ற வழக்கத்தை சங்க இலக்கியங்கள் சுட்டிக் காட்டுகின்றன. அன்பு செலுத்துவதில் தொடங்கி, ஆக்ரோஷமான போர் வரை இந்திய வரலாற்றில் பெண்களின், பெண் தெய்வங்களின் முக்கியத்துவம் கொஞ்சம் கூட குறையாமல் இருந்திருக்கிறது. பாரம்பரிய ஆன்மிக விழாக்களிலும் இது எதிரொலித்து வருகிறது.

இந்த வகையில், மிகுந்த சிறப்பிடம் பெற்ற ஒன்று துர்கா பூஜை. குறிப்பாக, வடமாநிலங்களில் ஆடல், பாடல், கொண்டாட்டங்களுடன் இந்த விழா களை கட்டும். பராசக்தியின் வடிவமான துர்க்கையை ஆராதிக்கும் விழாவான இது பொதுவாக அசுவினி மாதத்தில் (செப்டம்பர் - அக்டோபர்) கொண்டாடப்படுகிறது. சரத் நவராத்திரி எனவும், துர்கா பூஜை எனவும் இந்தியாவின் கிழக்கு பகுதிகளில், குறிப்பாக,  மேற்கு வங்கத்தில் மிக விமரிசையாக கொண்டாடுகின்றனர். இதற்காக பிரமாண்ட துர்கா சிலைகள் வடிவமைக்கப்படுகின்றன. இந்த விழாவில் சிலை கலைஞர் தொடங்கி, நகரில் உள்ள ஒவ்வொருவரின் பங்களிப்பும் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. இதையொட்டி, கலாசார அமைச்சகம் சார்பில் கொல்கத்தா  அருங்காட்சியகத்தில் கடந்த மாதம் 24ம் தேதி சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இதில், துர்கா பூஜையில் தங்களை அர்ப்பணிப்புடன் ஈடுபடுத்திக் கொண்ட 30 கலைஞர்கள் குழுவினர் மரியாதை செய்யப்பட்டனர்.

கொல்கத்தா நகரம் முழுவதுமே துர்கா பூஜைக்கான விழாக்கோலம் பூண்டிருக்கும். ஆண்டு முழுவதும் இதற்காகவே காத்திருந்தது போல ஆட்டம், பாட்டம், கலை நிகழ்ச்சிகள் என விழா களை கட்டும்.  அனைத்து தரப்பு மக்களும் பங்கேற்கும் இந்த விழாவை, யுனெஸ்கோவின் மனிதகுலத்தின் பாரம்பரிய கலாசார பட்டியலில் சேர்க்க  கடந்த 2019ம் ஆண்டு ஒன்றிய அரசு, யுனெஸ்கோவிற்கு பரிந்துரை செய்தது. இந்த பரிந்துரையை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் யுனெஸ்கோ ஏற்றுக் கொண்டது. தற்போது, மனித குல பாரம்பரிய கலாசார பட்டியலில் துர்கா பூஜையை சேர்த்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தற்போது, அடுத்ததாக குஜராத்தின் கர்பா நடனம் மேற்கண்ட பட்டியலில் சேர்ப்பதற்காக பரிந்துரைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

* பட்டியலில் இதுவரை...

இந்தியாவின் பாரம்பரிய கலாசார பட்டியலில் துர்கா பூஜை சேர்ந்திருப்பது போல, இதற்கு முன்பு, கும்ப மேளா, யோகா, பஞ்சாப்பில் ஜாண்டியாலா குருவின் தாதிராஸ் மக்கள் தயாரிக்கும் பாரம்பரிய செப்பு பாத்திரங்கள், மணிப்பூரில் மேற்கொள்ளப்படும் சங்கீர்த்தனம், டிரம் இசைத்தல் மற்றும் ஆடல்கள், லடாக்கில் பவுத்த மத புனித நூல்களை வாசித்தல், சாவ் நடனம் (ஜார்கண்ட், மேற்கு வங்கம், ஒடிசாவில் பண்டிகைகளின்போது ஆடப்படுகிறது), ராஜஸ்தானின் கல்பேலியா நாட்டுப்புற பாடல்கள் மற்றும் நடனம், கேரளாவின் முடியெட்டு எனப்படும் பாரம்பரிய நடன நாடகம், ராம லீலை, வேத மந்திரம் ஒலித்தல் ஆகியவையும் இடம் பெற்றுள்ளன.

Related Stories: