×

கோயம்பேடு பஸ் நிலையத்தில் பயணிகளிடம் செல்போன் திருடிய வாலிபர் கைது

அண்ணாநகர்: கோயம்பேடு பேருந்து நிலையத்தில்,  இரவு நேரங்களில் பேருந்து கிடைக்காமல் ஏராளமான பயணிகள் அங்கேயே தூங்குவது வழக்கம். அவர்களை நோட்டமிட்டு செல்போன்கள், பணம் திருடப்படுவதாக  தொடர்ந்து கோயம்பேடு போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதன் அடிப்படையில், திருட்டில் ஈடுபடும் நபர்களை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வந்தனர். மேலும்,  பேருந்து நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள 100க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில், வாலிபர் ஒருவர் பிக்பாக்கெட் அடிப்பதும், அசந்து தூங்கும் பயணிகளிடம் செல்போன் திருடுவதும் பதிவாகியிருந்தது. இதையடுத்து, தனிப்படை போலீசார், பேருந்துநிலையம் முழுவதும் மாறுவேடத்தில் தீவிர காண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் நேற்று அதிகாலை தூங்கிகொண்டு இருந்த பயணியின் அருகில் வாலிபர் ஒருவர் படுத்து கொண்டு செல்போன் திருடுவதை பார்த்து அவரை போலீசார் மடக்கிப் பிடித்தனர். பின்னர், அவரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அதில், அவர் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த  ஹேமந்த் (19) என்பதும், பேருந்து பயணிகளிடம் பிக்பாக்கெட் அடித்தும், செல்போன் திருடி வந்ததும்,  இதுவரை 50க்கும் மேற்பட்ட செல்போன்களை திருடியதும் தெரியவந்தது. மேலும், திருடிய செல்போன்களை சென்னை பாரிமுனையில் உள்ள செல்போன் கடைகளில், ரூ.2,000 முதல் ரூ.3,000 வரை விற்பனை செய்துவிட்டு அந்த பணத்தில் ஜாலியாக ஊர் சுற்றி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து,  அவரிடம் இருந்து 6 செல்போன்களை பறிமுதல் செய்த போலீசார், அவரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags : Koyambedu , Youth arrested for stealing mobile phones from passengers at Koyambedu bus station
× RELATED கோயம்பேடு பூ மார்க்கெட் வருகின்ற 19ம்...