ஆந்திராவில் இருந்து கடத்தி வந்து வடசென்னையில் கஞ்சா விற்ற 3 பேர் சிக்கினர்: 2 கிலோ கஞ்சா பறிமுதல்

பெரம்பூர்:  போதைப் பொருட்களின் நடமாட்டத்தை குறைக்கவும், அதனை கட்டுப்படுத்தவும் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் சமீபகாலமாக கஞ்சா விற்பனையில் ஈடுபடுவோர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர். மேலும், அவர்களின் சொத்துக்கள் முடக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கொடுங்கையூர் பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக கொடுங்கையூர் இன்ஸ்பெக்டர் சரவணனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், நேற்று முன்தினம் கொடுங்கையூர் எழில் நகர் தீயணைப்பு நிலையம் எதிரே உள்ள பகுதியில் போலீசார் வாகன சோதனையில்  ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக வந்த 3 நபர்களை பிடித்து விசாரணை செய்தபோது அவர்களிடம் கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரிந்தது.

மேலும், அவர்களை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்ததில் கொடுங்கையூர் எழில் நகர் பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் (எ) கருக்கா வெங்கடேஷ் (34), அதே பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் (34), கொடுங்கையூர் எம்ஜிஆர் நகர் பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (எ) ஓசை (27) என்பது தெரியவந்தது. இவர்கள் 3 பேரும் ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்து அதனை சிறு, சிறு பொட்டலங்களாக பிரித்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதனையடுத்து, 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்த கொடுங்கையூர் போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இவர்களிடமிருந்து 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories: