காந்தி ஜெயந்தி தினத்தில் கூடுதல் விலைக்கு மதுபாட்டில் விற்பனை செய்த பெண் கைது: 100 பாட்டில்கள் பறிமுதல்

திருவொற்றியூர்: காந்தி ஜெயந்திக்கு டாஸ்மாக் கடை விடுமுறையை பயன்படுத்தி, எர்ணாவூரில் வீட்டில் பதுக்கி வைத்து மதுபாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர். எர்ணாவூர் சுனாமி குடியிருப்பில் ஒரு பெண், தனது வீட்டிற்குள் பதுக்கி வைத்து மதுபாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்பதாக எண்ணூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், காவல் உதவி ஆணையர் பிரம்மானந்தம், ஆய்வாளர் கிளாஸ்டின் டேவிட் மற்றும் போலீசார் கடந்த சனிக்கிழமை இரவு சுனாமி குடியிருப்புகளில் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது, அங்குள்ள ஒரு வீட்டில் மதுபாட்டிங்கள் விற்பனைக்காக பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடித்தனர். அங்கு 6 பெட்டிகளில் இருந்த 100 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து, காவல் நிலையம் கொண்டு வந்தனர். விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த பத்மா (42) என்பதும், டாஸ்மாக் கடைகளிலிருந்து பாட்டில்களை வாங்கி வந்து வீட்டில் வைத்து அதிக விலைக்கு விற்றதும், நேற்று முன்தினம் காந்தி ஜெயந்தி என்பதால் மதுபான கடைகள் விடுமுறை விடப்பட்டதால், அன்றைய தினத்தில் விற்பதற்காக இவர் பாட்டில்களை கொண்டு வந்து வீட்டில் பதுக்கி வைத்திருந்தது தெரிந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Related Stories: