கடற்கரையில் தூய்மை பணி

திருவொற்றியூர்: திருவொற்றியூர் கடற்கரையில் 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு தூய்மை பணி நடைபெற்றது. திருவொற்றியூர் மண்டலத்திற்குட்பட்ட கடற்கரை பகுதிகளில் பிளாஸ்டிக் மற்றும் குப்பை சிதறி கிடப்பதால், கடல் மாசுபடுவதோடு கடலோரத்தில் வசிக்கும் மீனவர்களும் கடற்கரையை காண வரும் பொதுமக்கள் முகம்சுழிக்கும் நிலை உள்ளது. எனவே, இந்த குப்பை கழிவுகளை அகற்றி கடற்கரையை தூய்மைப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். அதன்பேரில், திருவொற்றியூர் நல்ல தண்ணீர் ஓடை குப்பம் முதல் எண்ணூர் நெட்டுக்குப்பம் வரை சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு கடற்கரை பகுதிகளில் சிதறி கிடக்கும் குப்பை கழிவுகளை அகற்றி தூய்மைப்படுத்த மாநகராட்சி சார்பில் திட்டமிட்டது.

இந்த பணிகளை திருவொற்றியூர் குப்பத்தில் மண்டல குழு தலைவர் தி.மு.தனியரசு நேற்று தொடங்கி வைத்தார். இதில் 50க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் கடற்கரை பகுதியில் சிதறிகிடந்த பிளாஸ்டிக், காகிதம், ரப்பர் போன்ற பொருட்களை அப்புறப்படுத்தினர். கடற்கரையை பார்க்க வரும் பொதுமக்கள் கடற்கரையை தூய்மையாக வைத்திருக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று தி.மு.தனியரசு வேண்டுகோள் விடுத்துள்ளார். கவுன்சிலர் உமா சரவணன், திமுக நிர்வாகிகள் தமிழ்ச்செல்வன், பிரேம்குமார், அவினாஷ், விஜயகுமார், உதவி பொறியாளர் கணேசன் மற்றும் கிராம நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: