வீட்டில் தனியாக வசித்து வரும் கணவரிடம் இருந்து 40 சவரன் ரூ.5 லட்சம், சொத்து அபகரிப்பு: உறவினர்கள் மீது மனைவி புகார்

அம்பத்தூர்: வீட்டில் தனியாக வசித்து வரும் கணவரிடமிருந்து பணம், நகை, சொத்துகளை உறவினர்கள் அபகரித்துவிட்டதாக மனைவி காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். அம்பத்தூர் அடுத்த கள்ளிகுப்பம், கங்கை நகரை சேர்ந்தவர் சரஸ்வதி (50). இவரது கணவர் கோவிந்தசாமி (60). இவர்களது மகள் ஜோதி (30), கடந்த சில ஆண்டுளுக்கு முன்பு சீனிவாசன் (37) என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 7 வயதில் ஒரு மகள் உள்ளார். இவர்களின் திருமணம் தந்தை கோவிந்தசாமிக்கு பிடிக்கவில்லை. இதனால் ஜோதி, தனது கணவர், குழந்தையுடன் அதே பகுதியில் தனிக்குடித்தனம் நடத்தி வருகிறார்.

கடந்த ஆண்டு தனது பேத்தியின் பிறந்த நாள் நிகழ்ச்சிக்கு சரஸ்வதி சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது அவரை கோவிந்தசாமி வீட்டிற்குள் அனுமதிக்கவில்லை. இதனால் தனது மகள் வீட்டிலேயே சரஸ்வதி தங்கியுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன் கோவிந்தசாமி உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டிருந்தார். தகவலறிந்தது மகளுடன் சரஸ்வதி மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அவரை காரனோடை, ஜெகந்நாதபுரத்தில் வசிக்கும் கோவிந்தசாமியின் உறவினர்கள் பார்க்க அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன் அம்பத்தூரில் உள்ள தனது வீட்டுக்கு சரஸ்வதி சென்று பார்த்துள்ளார்.

அப்போது அவரது வீட்டில் இருந்த 40 சவரன் நகை, ஒன்றரை லட்சம் மதிப்புள்ள வெள்ளிப்பொருட்கள், வீட்டின் சொத்து ஆவணங்கள், ரூ.5 லட்சத்தை கோவிந்தசாமியின் உறவினர்கள் அபகரித்து சென்றிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து சரஸ்வதி போன் மூலம் கேட்டதற்கு, அன்று இரவே சரஸ்வதியின் வீட்டுக்கு கோவிந்தசாமியின் சகோதரர்கள் அடியாட்களுடன் வந்து கொலை மிரட்டல் விடுத்து சென்றுள்ளனர். இதுகுறித்து அம்பத்தூர் போலீசில் நேற்று சரஸ்வதி புகார் அளித்தார். இப்புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதி சிசிடிவி காமிரா பதிவுகளுடன் கோவிந்தசாமி, அவரது சகோதரர்கள் மற்றும் உறவினர்களிடம் பல்வேறு கோணங்களில் விசாரிக்கின்றனர்.

Related Stories: