பெருங்குடி மண்டலத்தில் பருவமழையை எதிர்கொள்ள அனைத்து துறை அதிகாரிகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்: ஐஏஎஸ் அதிகாரி வலியுறுத்தல்

ஆலந்தூர்: பெருங்குடி மண்டலத்தில் பருவமழையை எதிர்கொள்ள அனைத்து துறை அதிகாரிகளும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என ஐஏஎஸ் அதிகாரி வேண்டுகோள் வைத்துள்ளார். சென்னை மாநகராட்சி, பெருங்குடி மண்டல எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வடகிழக்கு பருவ மழையின்போது பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மேற்கொள்ளப்பட உள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம், உள்ளகரத்தில் உள்ள பெருங்குடி மண்டல அலுவலகத்தில் நேற்று நடந்தது.  கூட்டத்திற்கு, ஐஏஎஸ் அதிகாரியும், மண்டல சிறப்பு கண்காணிப்பு அதிகாரியுமான ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். உதவி கமிஷனர் சீனிவாசன், செயற்பொறியாளர்கள் ஆர்.முரளி, பசுபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், குடிநீர் வாரியம், பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை துறை, வனத்துறை தீயணைப்புத்துறை, மின்துறை, சுகாதாரத்துறை போன்ற துறைகளின் அதிகாரிகள கலந்து கொண்டனர். இதில், மழைக்காலங்களில் அதிகமாக பாதிக்கப்படும், தாழ்வான பகுதியில் குடியிருக்கும் மக்களின் எண்ணிக்கை  விவரங்கள், பொதுமக்கள் தங்க வைக்கப்படும் இடங்கள், மீட்புக் குழுக்களின் விவரம், மருத்துவ உதவி மற்றும் மருத்துவ முகாம்கள் போன்ற விவரங்களையும்  பட்டியலாக தருமாறு மண்டல கண்காணிப்பு அதிகாரி ரவிச்சந்திரன், துறை அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டார்.

பின்னர் அவர் பேசும்போது, ‘‘பருவ மழைக்காலம் நெருங்குவதால் குண்டும் குழியுமான சாலைகள், மழைநீர் கால்வாய்கள், அடைப்பு ஏற்பட்டுள்ள சிறுபாலங்கள், சாய்ந்து காணப்படும் மரங்கள், மின்கம்பங்கள் உடனே சீர்செய்ய வேண்டும். குளங்கள், ஏரி கரைகள், போன்றவற்றை பலப்படுத்த வேண்டும். நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் குறித்து அடிக்கடி தொலைபேசியில் தகவல் தெரிவிக்க வேண்டும். மக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாதவாறு அனைத்து துறையினரும், ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்,’’ என்றார்.

Related Stories: