காஸ் சிலிண்டர் குடோன் தீ விபத்தில் பலி எண்ணிக்கை 7ஆக உயர்வு

சென்னை: காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத்  ஒன்றியம், தேவரியம்பாக்கம் ஊராட்சி தலைவர் அஜய்குமாரின் தம்பி ஜீவானந்தம் (51), அதே பகுதியில் சமையல் காஸ் ஏஜன்சி நடந்தி வந்தார். ஜீவானந்தத்தின் வீட்டின் அருகே  உள்ள கிடங்கில், சிலிண்டர்கள் இருப்பு வைக்கப்பட்டு, வினியோகம்  செய்யப்பட்டு வந்தது. கடந்த 28ம் தேதி இரவு 7 மணிக்கு ஏற்பட்ட  தீவிபத்தில், சிலிண்டர்கள் வெடித்து சிதறின. நான்கு இடங்களில் இருந்து வந்த  தீயணைப்பு வீரர்கள், தீயை அணைத்தனர். தீ விபத்தில் காயமடைந்த ஜீவானந்தம்,  அவரது 3 மகள்கள் மற்றும் வேன் டிரைவர், ஊழியர் உட்பட 12 பேர்  செங்கல்பட்டு மற்றும் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில்  சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.அங்கு அவர்களுக்கு தீவிர  சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவர்களில் 3 பேர் சிகிச்சை பலனின்றி  பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதுதொடர்பாக, ஊராட்சி தலைவர் அஜய்குமார் (53), காஸ் குடோன் மேலாளர் மோகன் (36) ஆகிய இருவரை போலீசார் கைது  செய்து சிறையில் அடைத்தனர்.இந்நிலையில், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வந்த தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த குணாளன் (25) என்பவர்  உயிரிந்தார். இதேபோல், சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வந்த தேவரியம்பாக்கத்தை சேர்ந்த கோகுல் (22), சண்முக  பிரியன் (17), கிஷோர் (22) ஆகியோர் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக  இறந்தனர். இதையடுத்து, காஸ் குடோன் வெடி விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 7  ஆக உயர்ந்துள்ளது.

Related Stories: