வண்ண விளக்குகள் பொருத்தப்பட்ட 100 ஜிப்சி ரோந்து வாகனங்கள்: கமிஷனர் தொடங்கி வைத்தார்

சென்னை: சென்னை காவல் கட்டுப்பாட்டு அறையின் கீழ், சட்டம் மற்றும் ஒழுங்கு பணிக்கு 91 மெயின் ரோந்து வாகனங்களும், 36 கூடுதல் ரோந்து வாகனங்களும், 104 ஜிப்சி ரோந்து வாகனங்களும், 41 ஸ்பெஷல் மொபைல் ரோந்து வாகனங்களும் இயங்கி வருகின்றன. இது மட்டுமின்றி போக்குவரத்தை ஒழுங்குப்படுத்த 47 போக்குவரத்து ரோந்து வாகனங்களும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் பொருட்டு அனைத்து மகளிர் காவல் நிலையங்களில் 35 இளஞ்சிவப்பு ரோந்து வாகனங்கள் என மொத்தம் 354 காவல் ரோந்து வாகனங்கள் இயங்கி வருகின்றன. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த  ஜூன் 10ம் தேதி சட்டம் மற்றும் ஒழுங்கு பணிக்கு 46 புதிய ரோந்து வாகனங்களும் போக்குவரத்து பிரிவிற்கு 47 புதிய  ரோந்து வாகனங்களும் என மொத்தம் 93 ரோந்து வாகனங்கள், சென்னை காவல் துறைக்கு வழங்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இயங்கி வருகிறது.

சென்னை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் பொதுமக்களிடமிருந்து வரும் புகார்கள் குறித்து காவல் கட்டுப்பாட்டு அறை மூலம் கிடைக்கும் தகவலை பெற்று போலீசார் ரோந்து வாகனம் மூலம் விரைந்து சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்து, பொதுமக்களின் பிரச்னைகள் விரைவாக தீர்க்கப்படுவதால் பொதுமக்களிடம் ரோந்து வாகனங்களுக்கு அதிகளவில் வரவேற்பு உள்ளது. இந்நிலையில், சென்னை  காவல் ஆணையர்  உத்தரவுப்படி முதற்கட்டமாக தனியார் வங்கியின் சிஎஸ்ஆர் நிதியின் மூலம் சுமார் ரூ.22.75 லட்சம்  செலவில் 100 ஜிப்சி ரோந்து வாகனங்களுக்கு புதிய ஒளிரும் வண்ண விளக்குகள் பொறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே ஜிப்சி ரோந்து வாகனங்களிலிருந்து அகற்றப்பட்ட பழைய ஒளிரும் வண்ண விளக்குகள், சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள சோதனைச்சாவடிகள் மற்றும் வாகனத் தணிக்கை செய்யும் இடங்களில் பொருத்தப்பட்டு இயங்கி வருகிறது.

நேற்று எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியில் சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கலந்து கொண்டு புதிய ஒளிரும் வண்ண விளக்குகள் பொருத்தப்பட்டுள்ள  100 ஜிப்சி ரோந்து வாகனங்களை கொடியசைத்து துவக்கி வைத்தார். ஜிப்சி ரோந்து வாகனங்களில் புதிதாக பொருத்தப்பட்டுள்ள ஒளிரும் வண்ண விளக்குகளால், பொதுமக்கள் ரோந்து வாகனங்களை பார்க்க கூடிய தெரிவு நிலை அதிகரிப்பதுடன், வாகன ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்களின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது. இந்நிகழ்ச்சியில், கூடுதல் காவல் ஆணையர் லோகநாதன், துணை ஆணையர்கள் செந்தில்குமார், சௌந்தரராஜன், கோபால், காவல் அதிகாரிகள் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

Related Stories: