ஜெபக்கூட்டம் நடத்த எதிர்ப்பு இந்து முன்னணி நிர்வாகி கைது: பெண் கவுன்சிலர் உட்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு

சுசீந்திரம்: நாகர்கோவில் அடுத்த தெங்கம்புதூர் அருகே வீராகுபதியில் கிறிஸ்தவ சபை ஒன்றின் சார்பில் ஜெபக்கூடம் உள்ளது. இந்த சபையை ஒசரவிளையை சேர்ந்த ஜெபசிங் (35) நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் வழக்கம் போல் ஜெபக்கூட்டம் நடந்து கொண்டிருந்தது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர். அப்போது இந்து முன்னணி ராஜாக்கமங்கலம் ஒன்றிய பொது செயலாளர் சுரேஷ் தலைமையில் வந்த அமைப்பினர், ஜெபக்கூட்டம் நடத்த எதிர்ப்பு தெரிவித்து தகராறு செய்தனர். அங்கிருந்தவர்களை தகாத வார்த்தையால் திட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனால் இரு தரப்புக்கும் இடையே பிரச்னை ஏற்படும் நிலை உருவானது.

தகவலறிந்து சுசீந்திரம் போலீசார் சென்றனர். அப்போது வாரந்தோறும் ஜெபக்கூட்டம் நடத்தி வருகிறோம் என்று அங்கிருந்தவர்கள் கூறினர். அவர்களை கண்டித்து இந்து முன்னணியினர் கோஷம் எழுப்பியவாறு ஜெபக்கூடத்துக்குள் செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி அப்புறப்படுத்தினர். இது தொடர்பாக ஜெபக்கூட நிர்வாகி ஜெபசிங் புகாரின் பேரில் இந்து முன்னணி நிர்வாகி சுரேஷ், ஒன்றிய தலைவர் மார்த்தாண்டன், புத்தளம் பேரூராட்சி 15 வது வார்டு கவுன்சிலர் விஜய கல்யாணி உட்பட 8 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இதில் சுரேசை கைது செய்தனர். மற்ற 7 பேரை தேடி வருகிறார்கள்.

Related Stories: