ஆயுத பூஜை - விஜயதசமி முன்னிட்டு கவர்னர், அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து

சென்னை: ஆயுத பூஜை-விஜயதசமி முன்னிட்டு கவர்னர், அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி: சரஸ்வதி தேவி தனது மெய்ஞானத்தால் அறியாமை என்ற இருளை அகற்றி, நமது மக்களுக்கு வளமையையும், மகிழ்ச்சியையும் கொண்டு வரட்டும். துர்கா தேவி, நம் மக்களை ஒரே குடும்பமாய் ஒன்றிணைத்து, அனைத்து தடைகளையும் தகர்த்து நமது தேசிய இலக்கை அடைவதற்கான வலிமையை நமக்கு வழங்கட்டும்.

தெலங்கானா மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்: நாம் செய்யும் ஒவ்வொரு செயலிலும் கருவியாகவும், அறிவாகவும் இருந்து செயல்படும் இறையருள் அனைவரின் வாழ்விலும் வெற்றியைத் தரட்டும்.

எடப்பாடி பழனிசாமி(அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர்): தமிழக மக்கள் கல்வியிலும், செல்வத்திலும், துணிவிலும் சிறந்து விளங்கவும், அவர்களுடைய வாழ்வில் வெற்றிகள் குவியவும் வாழ்த்துக்களை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

ஓ.பன்னீர் செல்வம்(அதிமுக ஒருங்கிணைப்பாளர்): நவராத்திரி பண்டிகையை மகிழச்சியோடு  கொண்டாடி கொண்டிருக்கும் தமிழக மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த ஆயுத  பூஜை மற்றும் விஜயதசமி நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.

டிடிவி.தினகரன்(அமமுக பொது செயலாளர் ): இந்த நன்னாளில் அவரவருக்கு மட்டுமின்றி, சுற்றியுள்ள அனைவரின் தொழிலும் வாழ்வும் சிறந்திட வேண்டுமென மனப்பூர்வமாக இறையருளை வேண்டுவோம்.

சரத்குமார்(சமக சரத்குமார்): தீயசக்தியை அழித்து நல்ல சக்தியின் வெற்றியை குறிக்கும் தினத்தில் மக்களின் எண்ணங்கள் யாவும் ஈடேறவும், தொழில் முன்னேற்றம் காணவும், நிறைவான செல்வமும், மகிழ்ச்சியும், மனநிறைவும், ஆரோக்கியமான நல்வாழ்வும் வாழ்ந்திட இறைவன் அருளட்டும்.

என்.ஆர்.தனபாலன்( பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர்) ஆயுதபூஜை என்பது அரக்க ராஜாவை அஷ்டமி, நவமி சந்திப்பில் தேவி துர்கா அழித்த வெற்றியின் கொண்டாட்டமாகவே கருதப்படுகிறது. அனைவருக்கும் நல் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்

எர்ணாவூர் நாராயணன்(சமத்துவ மக்கள் கழகம் தலைவர்) ஆயுத பூஜை கொண்டாடும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

இதேபோன்று சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வபெருந்தகை, தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சி தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா, புதிய நீதிக்கட்சி நிறுவன தலைவர் ஏ.சி.சண்முகம், கோகுல மக்கள் கட்சி தலைவர் எம்.வி.சேகர், தேசிய முன்னேற்ற கழக ஜி.ஜி. சிவா உள்ளிட்டவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Related Stories: