செல்போன் இறக்குமதியாளரிடம் லஞ்சம் வாங்கிய வழக்கு வருவாய் புலனாய்வு பிரிவு முன்னாள் கூடுதல் இயக்குநர் விடுதலை: சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை: ஒன்றிய அரசின் வருவாய் புலனாய்வுத்துறை கூடுதல் இயக்குனராக பதவி வகித்து வந்தவர் ராஜன். தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த இவர் கடந்த 7 ஆண்டுகளுக்கு மேலாக சென்னை சுங்க இலாகாவில் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர். விமான நிலையத்திலும், துறைமுகத்திலும் சுங்க இலாகா உயரதிகாரியாக பதவி வகித்தவர். சென்னையை சேர்ந்தவர் உபயதுல்லா தொழிலதிபர். இவர் வெளிநாடுகளில் இருந்து மொத்தமாக செல்போன்களை இறக்குமதி செய்து சென்னையில் விற்பனை செய்து வந்தார். கடந்த 2012ல் மொத்தமாக செல்போன்களை இறக்குமதி செய்த உபயதுல்லா, சோதனையில் வருவாய் புலனாய்வு துறை கூடுதல் இயக்குநர் ராஜனிடம் சிக்கினார்.

உபயதுல்லா மீது செல்போன்களை தகுந்த ஆவணங்கள் இல்லாமல் இறக்குமதி செய்ததாக குற்றச்சாட்டின் அடிப்படையில், அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அவரது வங்கி கணக்கும் முடக்கப்பட்டது. இந்நிலையில், உபயதுல்லா வழக்கில் இருந்து விடுபட ரூ.10 லட்சம் பேரம் பேசியதாக ராஜன் மீது குற்றச்சாட்டு எழுந்தது. முதற்கட்டமாக ரூ.2 லட்சம் பணமும், ஒரு ஐபேடும் கொடுத்தால் வழக்கில் இருந்து விடுவிப்பதற்கு அனைத்து உதவிகளையும் செய்வதாக ராஜன் உறுதியளித்ததாக கூறப்பட்டது. இதையடுத்து, சிபிஐ அதிகாரிகளிடம் உபயத்துல்லா புகார் அளித்தார். அதன்படி உபயத்துல்லா ராஜனின் கார் ஓட்டுநர் முருகேசனிடம் ரூ. 2 லட்சம் மற்றும் ஐபேடை கொடுத்துள்ளார். அப்போது, அங்கு மறைந்திருந்த சிபிஐ அதிகாரிகள் முருகேசனை கையும் களவுமாக பிடித்தனர்.

விசாரணையின் அடிப்படையில் முருகேசன் மற்றும் ராஜனை கைது செய்த சிபிஐ அதிகாரிகள் அவர்கள் மீது ஊழல் தடுப்பு சட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி, மெகபூப் அலிகான் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கில் 32 பேர் சாட்சியளித்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கில் குற்றச்சாட்டுகள் போதிய ஆதாரங்களுடன் நிரூபிக்கப்படவில்லை. சிபிஐயில் புகார் செய்த உபயத்துல்லாவின் சாட்சியங்களில் ஏராளமான முரண்பாடுகள் உள்ளன. அவரது சாட்சியங்கள் நம்பத்தக்கதாக இல்லை. எனவே, ராஜன் மற்றும் அவரது கார் ஓட்டுநர் முருகேசன் ஆகியோர் விடுதலை செய்யப்படுகிறார்கள் என்று தீர்ப்பளித்தார்.

Related Stories: