கோவையில் நடத்தையில் சந்தேகம் மருத்துவமனைக்குள் புகுந்து நர்ஸ் குத்திக்கொலை: கணவர் கைது

கோவை: கோவை ரத்தினபுரி கோபால் லே அவுட் பகுதியை சேர்ந்தவர் வினோத் (32). தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி நான்சி (27). இவர், அவினாசி ரோடு பாப்பநாயக்கன்பாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வந்தார். இவர்களுக்கு 7 வயது பெண் குழந்தை உள்ளது. கடந்த 4 ஆண்டாக கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு நான்சி கணவரை பிரிந்து தனியாக வசித்து வந்தார். குழந்தையை வினோத் தனது பெற்றோர் பராமரிப்பில் வளர்த்து வருகிறார்.

இந்நிலையில் நான்சிக்கு வேறு நபருடன் தொடர்பு இருக்கலாம் என நினைத்த அவர் பழி வாங்க திட்டமிட்டு நேற்று மனைவி பணியாற்றி வந்த மருத்துவமனைக்கு சென்றார். அங்கு அவருடன் வாக்குவாதம் செய்து கத்தியால் கழுத்து, வயிறு என பல இடங்களில் குத்தினார். பலத்த காயமடைந்த நான்சி, அதே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். இது தொடர்பாக ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிந்து வினோத்தை கைது செய்தனர். இவரது கையிலும் கத்தியால் கீறிய காயம் இருந்தது. இவர். சிகிச்சைக்கு பின்னர்  சிறையில் அடைக்கப்பட்டார்.

முன்னதாக, அவர்அளித்த வாக்குமூலத்தில்,‘‘எனக்கும், என் மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதால் பிரிந்து விட்டோம். அவள் குழந்தையை கூட பார்க்க ஆர்வம் காட்டவில்லை. கடந்த 8 மாதத்தில் ஒரு முறை கூட நான் அவளை பார்க்கவில்லை. உறவினர் ஒருவருடன் அவளுக்கு கள்ளக்காதல் இருப்பதாக எனக்கு தகவல் வந்தது. தான் வசிக்கும் இடத்தை நான்சி யாரிடமும் சொல்லவில்லை. விடுதியில் தங்கியிருப்பதாக தொடர்ந்து பொய் சொல்லி வந்தாள். அவளது கள்ளக்காதலை கண்டுபிடிக்க நான் அடிக்கடி பின் தொடர்ந்தேன். அவளின் பேச்சு செயல்பாட்டில் எனக்கு கடும் அதிருப்தியிருந்தது. மதியம் கூட்டம் இல்லாத நேரத்தில் நான்சியை சந்தித்து தனியாக பேச அழைத்தேன். மறைவான இடத்தில் நின்று பேசினோம். அப்போது உனக்கு கள்ளக்காதல் அவசியமா?, ஏன் நடத்தை கெட்டு இப்படி திரிகிறாய் என கண்டித்தேன். என்னை அலட்சியமாக பேசியதால் கோபத்தில் கத்தியால் குத்திகொன்று விட்டேன்’’ என்று கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

Related Stories: