புதுச்சேரியில் கூகுள்பேயில் பணம் பெற்று கஞ்சா விற்பனை: பிளஸ் 2 மாணவர் உள்பட 3 பேர் கைது

திருபுவனை: நெட்டப்பாக்கம் ஏரிக்கரையில் கூகுள்பேயில் பணம் பெற்று கஞ்சா விற்ற பிளஸ்2 மாணவர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். புதுச்சேரி, நெட்டப்பாக்கம், ஏரிக்கரை பகுதியில் போலீசார் நேற்று முன்தினம் மப்டியில் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டனர். கஞ்சா விற்பவர்களை வாடிக்கையாளர் போர்வையில் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அப்பகுதிக்கு வரவழைத்துள்ளனர். அதில் 3 பேரை போலீசார் மடக்கி சோதனையிட்டபோது 210 கிராம் கஞ்சா பொட்டலங்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

அவற்றை பறிமுதல் செய்த போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள், விழுப்புரம் மாவட்டம் வளவனூர், பத்மாவதி நகர், ராமகிருஷ்ணா பள்ளி வீதியைச் சேர்ந்த தனியார் ஊழியர் பாலாஜி (20), பிளஸ்2  மாணவர், பெயின்டர் திருப்பதி (19) என்பதும், கஞ்சாவை விழுப்புரத்தில் மொத்த வியாபாரியிடம் இருந்து வாங்கி வந்து விடுமுறை நாட்களில் தொலைபேசி மூலமாகவே மாணவர்களிடம் கூகுள்-பேயில் பணத்தை பெற்று, கஞ்சா பொட்டலங்களை அனுப்பி டெலிவரி செய்ததும் அம்பலமானது. இதையடுத்து 3 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களை மாஜிஸ்திரேட்  முன்பு ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.

Related Stories: