ஊட்டி தாவரவியல் பூங்காவில் 2ம் சீசனுக்கான மலர் அலங்காரம்: வனத்துறை அமைச்சர் துவக்கி வைத்தார்

ஊட்டி: நீலகிரி மாவட்டத்திற்கு நாள்தோறும் பல ஆயிரம் சுற்றுலா பயணிகள் வந்தபோதிலும், முதல் மற்றும் 2ம் சீசனின்போது அதிகளவு சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இரண்டாவது சீசன் துவங்கி நடந்து வரும் நிலையில், ஊட்டி தாவரவியல் பூங்காவில் பல்வேறு வகையான சுமார்‌ 4 லட்சம்‌ மலர்செடிகளைக் கொண்டு மலர் பாத்திகள்‌ அமைக்கப்பட்டுள்ளன. தற்போது இந்த மலர் செடிகளில் மலர்கள் பூத்து கண்ணிற்கு விருந்தாக காட்சியளிக்கிறது. இவை 10 ஆயிரம் மலர்  தொட்டிகள் மாடங்களில் அடுக்கி காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம்‌ இயற்கை வேளாண்மை மாவட்டமாக மாறுவதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும்‌ வகையில்‌ கோ ஆர்கானிக் (இயற்கை வேளாண்மையை நோக்கி) என்ற வாசகம்‌ 2 ஆயிரம் மலர் தொட்டிகளால்‌ மாடங்களில் வடிவமைக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. நீலகிரி நெகிழி இல்லா மாவட்டமாக மாற்றும்‌ பொருட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும்‌ வகையில்‌ பெரணி  இல்லம்‌ புல் மைதானத்தில்‌ நெகிழிப்பையை தவிர்த்து மஞ்சப்பையை பயன்படுத்தும்‌  நோக்கமாக 1000 மலர்த்தொட்டிகள்‌ காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இதனை தமிழக வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் நேற்று துவக்கி வைத்தார். ஆயுத பூஜை விடுமுறைக்கு வந்துள்ள சுற்றுலா பயணிகள் இந்த மலர் அலங்காரத்தை கண்டு ரசித்து செல்கின்றனர்.

Related Stories: