×

மழையினால் குறுவை நெல் பயிர்கள் சேதம் ஏக்கருக்கு ரூ.35,000 இழப்பீடு வழங்க வேண்டும்: எடப்பாடி கோரிக்கை

சென்னை: மழையினால் குறுவை நெல் பயிர்கள் மூழ்கி சேதமடைந்துள்ளதால், ஏக்கருக்கு குறைந்தபட்சம் ரூ.35,000 இழப்பீடு வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கோரிக்கை வைத்துள்ளார். இதுகுறித்து அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பெய்த மழையினால் குறுவை நெல் சாகுபடி செய்த சுமார் ஒரு லட்சம் ஏக்கருக்கு மேற்பட்ட நிலங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் மூழ்கி சேதமடைந்துள்ளன. இதனால் விவசாயிகள் மிகுந்த மனவேதனையுடன் உள்ளனர். தண்ணீரில் மூழ்கி பாதிக்கப்பட்ட நிலங்களை உடனடியாக அதிகாரிகளை அனுப்பி கணக்கெடுத்து, ஏக்கர் ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ.35,000 இழப்பீடு வழங்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். சென்ற சம்பா சாகுபடியின்போது பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இன்று வரை இழப்பீடு வழங்கப்படவில்லை. எனவே, அந்த இழப்பீட்டை அரசு உடனடியாக பெற்றுத்தர வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : Edappadi , Rs 35,000 compensation per acre for rain-damaged paddy crops: Edappadi demands
× RELATED தமிழ்நாட்டில் போதைப்பொருள் பயன்பாடு...