பைக் சாகசம் செய்ததால் நூதன தண்டனை ஐதராபாத் வாலிபர் அண்ணா சாலையில் 3 வாரம் போக்குவரத்து விழிப்புணர்வு: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு; பொதுமக்கள் வரவேற்பு

சென்னை: அண்ணா சாலையில் பைக் சாகசத்தில் ஈடுபட்ட வாலிபருக்கு உயர் நீதிமன்றம் அளித்த நூதன தண்டனையை தொடர்ந்து, அண்ணா சாலையில் பதாகையுடன் ஐதராபாத் வாலிபர் வாகன ஓட்டிகளிடம் போக்குவரத்து விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டார். இந்த காட்சிகளை பார்த்த பொதுமக்கள் இந்த வகை தண்டனைகள் தான் தவறு செய்பவர்களை திருத்தும் என்று வரவேற்றனர். சென்னை அண்ணாசாலையில் கடந்த மாதம் 8ம் தேதி இரவு பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் அண்ணா மேம்பாலத்தில் வாலிபர் ஒருவர் பைக் சாகசத்தில் ஈடுபட்டார். இதை அவரது சக நண்பர்கள் வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்தனர்.

இதுகுறித்து மாநகர போக்குவரத்து போலீசார் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உள்ள வீடியோ பதிவுகளை வைத்து விசாரணை நடத்தினர். அதில், ஆம்பூரை சேர்ந்த முகமது ஹாரிஸ்(19) மற்றும் முகமது சைபான்(19) ஆகியோர் இந்த வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்தது தெரியவந்தது. உடனே பாண்டிபஜார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் பைக் சாகசத்தில் ஈடுபட்ட வீடியோவை பதிவு செய்த 2 வாலிபர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், சம்பவத்தன்று அண்ணா சாலையில் பைக் சாகசத்தில் ஈடுபட்ட வாலிபர் தெலங்கானா மாநிலம் ஐதராபாத் பகுதியை சேர்ந்த கோட்லா அலெக்ஸ் பினோய் என தெரியவந்தது. இவரை இன்ஸ்டாகிரமில் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பின் தொடந்து வருகின்றனர் என விசாரணையில் தெரியவந்தது. பிறகு பைக் பதிவு எண்ணை வைத்து தனிப்படை போலீசார் ஐதராபாத்தில் சாகசத்துக்கு பயன்படுத்திய விலை உயர்ந்த பைக்கை பறிமுதல் செய்தனர்.

மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் தேடி வந்தனர். அதில் முக்கிய குற்றவாளியான பைக் சாகசத்தில் ஈடுபட்ட கோட்லா அலெக்ஸ் பினோய் தலைமறைவாக இருந்த படியே சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, 3 வாரங்களுக்கு கோட்லா அலெக்ஸ் பினோய் ஒவ்வொரு திங்கள் கிழமையும் காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரையிலும், அதேபோல் மாலை 5.30 மணி முதல் 6.30 மணி வரை அண்ணா சாலையில் உள்ள சிக்னலில் போக்குவரத்து விழிப்புணர்வு பதாகையுடன் வாகன ஓட்டிகளிடம் பிரசாரம் செய்ய வேண்டும்.

அதோடு இல்லாமல் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் விபத்து பிரிவில் வார்டு பாயாக பணியாற்ற வேண்டும். 3 வாரங்களுக்கும் பாண்டிபஜார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்று கூறி நூதன தண்டனை வழங்கி கோட்லா அலெக்ஸ் பினோய்க்கு முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். அந்த உத்தரவை தொடர்ந்து நேற்று காலை 9.30 மணிக்கு அண்ணா சாலையில் உள்ள தேனாம்பேட்டை சிக்னலில் ‘சாலை பாதுகாப்பை மதிக்க வேண்டும், பைக் சாகசங்கள் வேண்டாம்’ என்ற வாசகங்களுடன் கோட்லா அலெக்ஸ் பினோய்  வாகன ஓட்டிகளிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு பிரசாரம் செய்தார். பைக் சாகசத்தில் ஈடுபட்ட வாலிபருக்கு உயர் நீதிமன்ற பிறப்பித்த நூதன தண்டனையை பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் வெகுவாக பாராட்டினர்.

Related Stories: